வாலிபர் கொலை வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டு சிறை
கோவை; வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், இருவருக்கு தலா மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து, கோவை சிறார் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.கோவை, ஒண்டிப்புதுாரை சேர்ந்த நாகராஜ்,27, இவரது நண்பர் சதீஷ்குமார்,25, ஆகியோர், கடந்த 2012, ஏப்., 30 ல், சிங்காநல்லுார், பட்டணம் ரோடு, டோபிகானா அருகே நடந்து சென்றனர். அப்போது, ஐந்து பேர் சேர்ந்து பொது இடத்தில் மது குடித்ததை பார்த்து கண்டித்ததால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, கார்த்திகேயன், செந்தில்குமார், பிரகாஷ், வினோத்குமார் மற்றும் 17 வயது இரண்டு சிறுவர்கள் சேர்ந்து நாகராஜ், சதீஷ்குமார் ஆகியோரை கத்தியால் குத்தினர். இதில், நாகராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சதீஷ்குமார் தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார். சிங்காநல்லுார் போலீசார் விசாரித்து, ஆறு பேர் மீதும் கொலை வழக்கு பதிந்து கைது செய்தனர். இவர்களில், இருவர், 17 வயதுடையவர்கள் என்பதால், கோவை இளம் சிறார் நீதிமன்றத்தில் தனியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.மற்றவர்கள் மீது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். சிறுவர்கள் மீதான வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. விசாரித்த நீதிபதி அருண்குமார் மற்றும் உறுப்பினர்கள் ஜெனிபர், மகேஷ் ஆகியோர், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் தலா மூன்றாண்டு சிறை தண்டனை விதித்தனர். தண்டனை பெற்ற இருவருக்கும் தற்போது, 30 வயது என்பதால், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.