கட்டுப்படுத்தப்படாத சர்க்கரையால் பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்புண்டு
''முறையாக கட்டுப்படுத்தப்படாத சர்க்கரையால், பார்வை இழப்புக்கு அதிக வாய்ப்பு உள்ளது,'' என்கிறார் இதயங்கள் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன்.அவர் கூறியதாவது:சர்க்கரை நோய் வந்துவிட்டால், இரண்டு உறுப்புக்களை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒன்று கண்; மற்றொன்று கால். இந்தியாவில் பார்வையிழப்புக்கு முக்கிய காரணம் சர்க்கரை நோய். முறையாக கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய், விழித்திரைக்குப் பின்னால் இருக்கும் ரத்தக் குழாய்களைப் பாதிக்கும். அதனால் விழித்திரையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, பார்வையை இழக்க நேரிடலாம். இதற்கு 'டயாபடிக் ரெட்டினோபதி' என்று பெயர். ஆண்டுக்கு ஒரு முறையாவது, கண் பரிசோதனை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், பார்வை இழப்பு அபாயம் குறைந்து விடும்.டி.சி.சி.டி.,(DCCT) எனும் ஆய்வில், சர்க்கரை நோய் உள்ளவர்கள், இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர். ஒரு பிரிவினருக்கு முறையாக சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, விழித்திரை பரிசோதிக்கப்பட்டது.இரண்டாவது பிரிவினருக்கு, சர்க்கரை நோய் கட்டுப்பாடும் முழுமையாக இல்லை. அத்தியாவசியத் தேவை என்றால் மட்டுமே கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.ஏழு ஆண்டுகள் கழித்து, இரு பிரிவினரையும் பரிசோதித்ததில், முதல் பிரிவினருக்கு விழித் திரைக்குப்பின் உள்ள ரத்தக்குழாய்களின் பாதிப்பு ஏறக்குறைய, 60 - 70 சதவிகிதம் வரை குறைவாக இருந்தது.ஆகவே, அடுத்த முறை உங்கள் சர்க்கரை நோய் மருத்துவரைப் பார்க்கும் போது, அவரே மறந்துவிட்டாலும் நீங்கள் கண் பரிசோதனை குறித்து ஞாபகப்படுத்துங்கள்.இவ்வாறு, டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் கூறினார்.