| ADDED : மே 07, 2024 10:39 PM
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவில் பஸ் நிற்காமல் சென்றதால் பஸ்சை பொதுமக்கள் தடுத்து சிறை பிடித்தனர்.பொள்ளாச்சி - கோவை வழித்தடத்தில் அதிகளவில் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், சில பஸ்கள் விதிமீறலில் ஈடுபடுவது தொடர்கதையாகியுள்ளது. நேற்று முன்தினம் மாலை, பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி சென்ற தனியார் பஸ், கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டின் வழியாக செல்லாமல் மேம்பாலத்தில் சென்றது.கிணத்துக்கடவில் இறங்க வேண்டிய பயணியரை, பாலம் துவங்கும் இடத்தில் பஸ் கண்டக்டர் இறக்கி விட்டுள்ளார். மேலும், கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டுக்கு பஸ் செல்லது என கூறியுள்ளார்.அதிருப்தியடைந்த பயணியர், அரசம்பாளையம் பிரிவில் பஸ்சை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருதரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து பஸ் பயணியர்கள் கூறியதாவது:பெருமபாலான நேரங்களில், கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் உள்ள பஸ் ஸ்டாப்பில் பஸ் நிற்பது இல்லை. மேம்பாலத்தில் பஸ் செல்வதை பயணியர் அறியாமல், பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கின்றனர். மேலும், பாலம் துவங்கும் இடத்தில் பயணியரை இறக்கி விட்டு செல்கின்றனர்.இதுபற்றி பல முறை வட்டார போக்குவரத்து அலுவலர்களிடம் முறையிட்டும், தற்போது வரை தீர்வு காணப்படவில்லை. இதுபோன்று, பஸ்சை சிறை பிடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதை அதிகாரிகளும் கண்டும் காணாமல் இருக்கின்றனர்.பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்லும் பஸ்சில், பயணியர் குறைவாக இருந்தால், அந்த பஸ் கிணத்துக்கடவு வருகிறது. பொள்ளாச்சியிலேயே பஸ் நிரம்பி விட்டால், கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்ட் வராமல், பாலத்தின் மேல் செல்கிறது.ஆனால், கிணத்துக்கடவில் பஸ் நிறுத்த ஸ்டேஜ் உள்ளது. இங்கு நிற்காமல் லாப நோக்கிற்காக தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கண்டுகொள்ளாவிட்டால், விதிமீறும் பஸ்கள் அனைத்தையும் சிறைபிடிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, கூறினர்.