கோவை:அவினாசிலிங்கம் பல்கலை என்.சி.சி., திட்டம் மற்றும் கோவை மக்கள் சேவை மையம் சார்பில், கார்பன் உமிழ்வை குறைக்கும் நோக்கில், கீரின் கிரெடிட் திட்ட துவக்கவிழா நேற்று பல்கலை அரங்கில் நடந்தது.இதில், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி ஸ்ரீனிவாசன் தலைமை வகித்து நிகழ்ச்சியை துவக்கிவைத்தார். கார்பன் உமிழ்வை குறைப்பதற்கு மரங்கள் வளர்க்கவேண்டியது கட்டாயம். அதே சமயம், நம் அன்றாட செயல்பாடுகள், பயன்பாடுகளை குறைப்பதன் வாயிலாக, கார்பன் உமிழ்வை குறைக்கும் வகையில், 'விரிச்சுவல் ட்ரீ பிளாண்டிங்' திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கூறியதாவது: காலநிலை, பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க ஆக்சிஜன் அதிகரிக்கவேண்டும் அல்லது கார்பன் உமிழ்வை குறைத்து சமநிலைப்படுத்தவேண்டும். மரங்களை தற்போது நடவு செய்து, அதை வளர்த்து பெரிதாவதற்குள் கார்பன் உமிழ்வால் வெப்பநிலை மேலும், பல மடங்கு அதிகரித்து விடும். அதை கட்டுப்படுத்தவே, ' விரிச்சுவல் ட்ரீ பிளாண்டிங்' திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் துவக்கமாக, இந்நிகழ்வில், 5 நிமிடம், 2500 மாணவிகள் மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்தனர். இதன் வாயிலாக, ஒவ்வொருவரும் 5 கிராம் வீதம் கார்பன் உமிழ்வை குறைத்துள்ளோம். இதே போன்று, 365 நாட்கள் கடைபிடித்தால், 182 மரங்களை நட்டு வளர்த்தியதற்கு சமம். இதை நம் அனைவரும் மேற்கொண்டால், கார்பன் உமிழ்வை கட்டுக்குள் கொண்டு வர இயலும். குறைந்தபட்சம் குளிக்க செல்லும் ஐந்து நிமிடங்களாவது மொபைல் போனை சுவிட்ச் ஆப் வைக்க முயற்சிக்கவேண்டும். அதே போன்று, வீட்டின் அருகில் கடைகளுக்கு செல்லும் போது வாகனங்களை எடுக்காமல் நடப்பது, தேவையற்ற அறைகளில் போன், லைட் எரியாமல் ஆப் செய்வது போன்ற சிறு சிறு செயல்பாடுகள் வாயிலாக, பெரிய மாற்றத்தை அனைவரும் ஒன்றிணைந்தால் ஏற்படுத்தலாம். இவ்வாறு, அவர் கூறினார். நிகழ்வில், பல்கலை துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர், டீன் வாசுகி, என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் கிருத்திகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.