வி.எல்.பி., ஜானகியம்மாள் கல்லூரி பட்டமளிப்பு விழா
போத்தனூர்; கோவை, கோவைபுதூர் செல்லும் வழியிலுள்ள, வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை, அறிவியல் கல்லூரியின், 14வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.கல்லூரி செயலாளர் ஜெயஸ்ரீ விழாவை துவக்கி வைத்தார். கோவை பி.எஸ்.ஜி., மேலாண் நிறுவன இயக்குனர் ஸ்ரீவித்யா பேசுகையில், ''மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை வழிநடத்த அறிவையும், தனித்திறனையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். தொழில் முனைவோர் அதிகளவில் உருவாக வேண்டும். கல்வி கற்பதிலும், நாம் மேற்கொள்ளும் செயலிலும் ஈடுபாடும், அர்ப்பணிப்பும் இருக்க வேண்டும்,'' என்றார்.தொடர்ந்து, பல்கலை தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த, 66 பேருக்கு கேடயம் மற்றும் பட்ட சான்றிதழை வழங்கினார். மேலும் 570 பேருக்கு பட்ட சான்றிதழ் வழங்கப்பட்டது.முன்னதாக, கல்லூரி முதல்வர் சதீஷ்குமார் வரவேற்றார். முடிவில் உறுதிமொழி ஏற்புடன் விழா நிறைவடைந்தது. ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.