வடபுதுாரில் துவங்கியது குடிநீர் தட்டுப்பாடு
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, வடபுதூர் பகுதியில் ஒன்றரை மாதமாக குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது.கிணத்துக்கடவு வடபுதூர் ஊராட்சியில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு மாதத்திற்கு இரு முறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது, வடபுதூரின் ஒரு சில பகுதிகளில் கடந்த ஒன்றரை மாதங்களாக, குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால், மக்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.வீட்டில் குடிநீர் இல்லாமல் மக்கள் பலர், இரவு பகல் பார்க்காமல் கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப் அருகே உள்ள இடத்தில் 'லீக்கேஜ்' தண்ணீர் வரும் பகுதியில் குடிநீர் பிடித்து செல்கின்றனர். சிலர், பணம் கொடுத்து கேன் தண்ணீர் வாங்கி உபயோகப்படுத்துகின்றனர்.மக்கள் கூறுகையில், 'கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், குடிநீர் தேவை அதிகமாக இருக்கும். தற்போது நீண்ட தூரம் சென்று குடிநீர் எடுத்து வருகிறோம். இதனால், பெரும் சிரமம் ஏற்படுகிறது.வீட்டில் குடிநீர் தேவை அதிகம் உள்ளதால், வெளியில் சென்று தண்ணீர் எடுத்து வரும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குடிநீர் பிரச்னை சரி செய்ய குடிநீர் மற்றும் வடிகால் வாரிய அதிகாரிகள், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.