பொள்ளாச்சி:''கள் இறக்கும் போராட்டத்தை கைவிட மாட்டோம்,'' என, நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தெரிவித்தார்.கள்ளக்குறிச்சி சம்பவத்தையடுத்து, கள் இறக்கும் விவசாயிகளுக்கு நெருக்கடி தருவதாக கூறி நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தினர், பொள்ளாச்சி டி.எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.பொள்ளாச்சி டி.எஸ்.பி., ஜெயச்சந்திரனிடம், 'கள் இறக்குவதையும், விற்பனை செய்வதும் தொடரும்; எங்களை துன்புறுத்துவதை கைவிட வேண்டும்,' என்றார் விவசாயிகள். அதற்கு, டி.எஸ்.பி., சப் - கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் இந்த கோரிக்கையை தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து, விவசாயிகள் கலைந்து சென்றனர்.நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க மாநில கொள்கை பரப்புச் செயலாளர் முருகானந்த கிருஷ்ணன் கூறியதாவது:பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில், 200 விவசாயிகள், 10 - 15 மரங்களில் இருந்து நீரா மற்றும் கள் இறக்கி விற்பனை செய்து வருகிறோம். கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவத்தை, கள் இறக்கும் விவசாயிகளுடன் தொடர்புபடுத்தி, கள் இறக்க கூடாது என நெருக்கடி கொடுப்பது வேதனையாக உள்ளது.பூரண மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசு முதலில் மதுக்கடைகளை மூட வேண்டும். அதன்பின், விவசாயிகளிடம் பேச்சு நடத்த வேண்டும். மாநில அரசிடம் தவறை வைத்துக்கொண்டு, விவசாயிகளை வஞ்சிப்பது மோசமான செயலாகும்.ஒரு சில விவசாயிகளை தீவிரவாதியை போல காத்திருந்து போலீசார் விசாரணை செய்கின்றனர். விவசாயிகள் தீவிரவாதிகள் அல்ல, எங்கும் ஓடி ஒளிய மாட்டோம். எங்களது கோரிக்கை ஏற்காமல் கைது செய்தால், காந்தி சிலை முன் கள் விற்பனை செய்யும் போராட்டம் நடத்தப்படும்.கள் இறக்குவோரை கைது செய்தால், அடுத்ததாக வீட்டு பெண்கள் வருவர். எந்த சூழலிலும், கள் இறக்கி விற்பனை செய்வதையும், கள் தடையை நீக்க வேண்டும் என்ற போராட்டத்தையும் கைவிட மாட்டோம். போலீசார் நடவடிக்கை எடுத்தாலும் எங்களது முடிவில் இருந்து பின் வாங்க மாட்டோம்.இவ்வாறு, அவர் கூறினார்.