கோவை;கொலை செய்வதற்காக துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு சென்ற நால்வரை, சொக்கம்புதூரில் வாகன சோதனையின் போது, போலீசார் கைது செய்தனர்.செல்வபுரம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட சொக்கம்புதூர், மயானம் அருகே உள்ள முத்தண்ணன் குளம் செல்லும் சாலையில், பிரேம்தாஸ் தலைமையிலான போலீசார், நேற்று முன் தினம் அதிகாலை, வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக, இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், நிறுத்தாமல் சென்றனர். போலீசார் அவர்களை துரத்தி பிடித்து, விசாரணை செய்தபோது, மூவரும் செல்வபுரத்தை சேர்ந்த சஞ்சய் குமார்,24, தீத்திபாளையத்தை சேர்ந்த ஜலாலுதீன்,50, இடையர்பாளையத்தை சேர்ந்த சரவணகுமார்,40 என்பது தெரிந்தது.அவர்களை சோதனை செய்த போது, சஞ்சய் குமாரின் இடுப்பில், தோட்டா இல்லாத துப்பாக்கியும், இருசக்கர வாகனத்தில் கத்தியும் இருந்தது. விசாரணையில் அவர்கள் கூறியதாக, போலீசார் தெரிவித்ததாவது:நாங்கள் சஞ்சய் ராஜா கேங்கை சேர்ந்தவர்கள். எங்கள் குரூப்பில் எங்களுக்கு எதிராக வேலை செய்த சத்தியபாண்டியன் என்பவரை, ஏற்கனவே கொலை செய்து விட்டோம். அடுத்ததாக, பசும்பொன் குமார் என்பவரை, கொலை செய்ய திட்டமிட்டிருந்தோம்.இதற்காக, சஞ்சய்ராஜா, காஜா உசேன், சல்புன்கான் ஆகியோருடன் சேர்ந்து, காஜா உசேனின் தந்தையான ஜலாலுதீனிடம் துப்பாக்கி கொடுத்து வைத்திருந்தோம். தற்போது அந்த துப்பாக்கியை வாங்கிக்கொண்டு, பசும்பொன் குமாரை தேடிப்பிடித்து துப்பாக்கி காட்டி மிரட்டி, ஒதுக்குப்புறமான இடத்திற்கு கொண்டு சென்று கொலை செய்ய, சென்று கொண்டிருந்தோம். ஆனால் சிக்கி விட்டோம்.இவ்வாறு, மூவரும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். செல்வபுரம் போலீசார், சஞ்சய் குமார், ஜலாலுதீன், சரவணகுமார் மற்றும் சல்புல்கான் ஆகிய நால்வரையும் கைது செய்து, சதி திட்டம் தீட்டுதல், கொலை முயற்சி, சட்ட விரோதமாக ஆயுதங்கள் வைத்திருத்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்து, துப்பாக்கி மற்றும் கத்திகளை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள சஞ்சய் ராஜா மற்றும் காஜா உசேன் ஆகியோரை, தேடி வருகின்றனர்.