மேலும் செய்திகள்
நேந்திரன் வாழை அறுவடை மும்முரம்
12-Aug-2024
தொண்டாமுத்தூர் : தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு சாகுபடி செய்யப்பட்டுள்ள செண்டுமல்லி, வாடாமல்லி, கோழி கொண்டை பூக்களுக்கு, உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, வடிவேலம்பாளையம், மோளபாளையம், மங்களபாளையம், நரசீபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும், செண்டுமல்லி, வாடாமல்லி, கோழிகொண்டை ஆகிய பூக்கள் சாகுபடி செய்யப்படும். இங்கிருந்து, ஓணம் பண்டிகைக்காக கேரள மாநிலத்திற்கு, பூக்கள் அனுப்பப்படும். இந்தாண்டும், ஓணம் பண்டிகையை முன்னிட்டு, தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், சுமார், 200 ஏக்கர் பரப்பளவில், பூக்கள் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது பூக்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், வயநாடு நிலச்சரிவு சம்பவம் காரணமாக, இந்தாண்டு கேரள மாநிலத்தில், ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக, அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால், ஓணம் பண்டிகைக்காக, வழக்கமாக பூக்களை வாங்க வரும் வியாபாரிகள், இந்தாண்டு பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. பண்டிகைக்கு மூன்று நாட்களே உள்ள நிலையில், வியாபாரிகள் சரியாக வராததாலும், பூக்களுக்கு உரிய விலை கிடைக்காததாலும், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வடிவேலம்பாளையத்தை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், 'வழக்கமாக, ஓணம் பண்டிகைக்கு பூக்கள் பர்ச்சேஸ் செய்ய வருவோரில், சிலர் மட்டுமே தொடர்பு கொள்கின்றனர். செண்டுமல்லி, வாடாமல்லி, கோழி கொண்டை பூக்கள், கிலோ 100 ரூபாய்க்கு குறையாமல் விற்பனையாகும். இந்தாண்டு, ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், செண்டுமல்லி, 20 முதல் 40 ரூபாய்க்கும், வாடாமல்லி, 40 ரூபாய்க்கும், கோழி கொண்டை, 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இந்த விலை, லாபத்தை தராது' என்றனர்.
12-Aug-2024