மேலும் செய்திகள்
மைக் புலிகேசி சீமான்: டி.ஐ.ஜி., வருண் 'நக்கல்'
20-Feb-2025
கோவை:கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிறப்பு எஸ்.ஐ., மகேஸ்குமாரிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர்.நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்த, கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களாவில், 2017ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. போலீசார் இதில் தொடர்புடைய சயான், வாளையார் மனோஜ் உட்பட, 10 பேரை கைது செய்தனர்.வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். தொடர்ந்து, வழக்கு தொடர்பாக தகவல்களை சேகரிக்க பலருக்கு சம்மன் அனுப்பி, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த, தனிப்படை போலீசார் மகேஸ்குமார், விஜயகுமார், ரமேஷ்குமார், பசுபதி, கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் மற்றும் சுரேஷ், கபீர், சங்கர் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகும்படி, சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பினர். சிறப்பு எஸ்.ஐ., மகேஸ்குமார், நேற்று முன்தினம் காலை கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் ஆஜரானார். எஸ்டேட் மேலாளர் நடராஜன், நாளை ஆஜராவதாக தெரிவித்தார். மற்றவர்கள் ஆஜராகவில்லை. சி.பி.சி.ஐ.டி., அதிகாரி ஒருவர் கூறியதாவது:கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய புள்ளிகளான கனகராஜ் மற்றும் சியான் ஆகியோரின் செல்போன்களை, நீலகிரி போலீசார் பறிமுதல் செய்ய தவறிவிட்டனர். கனகராஜ் மற்றும் சியான் ஆகியோர் தலைமறைவாக ஆந்திரா மாநிலத்திற்கு சென்ற போது, அவர்களின் எண்ணுக்கு சில அழைப்புகள் வந்துள்ளன. ஆரம்ப கட்டத்தில் வழக்கை விசாரித்த அதிகாரிகள், மொபைல் போன்களை பறிமுதல் செய்திருந்தால், பல கேள்விகளுக்கு தற்போது விடை கிடைத்திருக்கும். அந்த இரண்டு மொபைல்களும் தற்போது எங்கு இருக்கின்றன, அல்லது அழித்து விட்டனரா என்பது குறித்து விசாரணை செய்யப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
20-Feb-2025