பாணர்கள் எங்கே போனார்கள் ஆய்வு நுால் வெளியீட்டு விழா
கோவை:'பாணர்கள் எங்கே போனார்கள்' என்ற ஆய்வு நுால் வெளியீட்டு விழா, கோவை ஆருத்ரா ஹாலில் நேற்று நடந்தது.மெய்யியல் ஆய்வாளர் லட்சுமி காந்தன் வரவேற்றார். வேளாண் விஞ்ஞானியும், இந்திய வனப்பணி முன்னாள் அதிகாரியுமான காளித்துரை நுாலை வெளியிட, சர்வதேச அமைதி பேரவை ஆலோசகர் கிம் கோபி சுந்தர்ராஜன் பெற்றுக் கொண்டார்.நுாலாசிரியர் ஸ்ரீராம் ஆதித்தன் பேசியதாவது: பாணர்கள் எங்கே போனார்கள் என்ற நுால், ஆதித்தமிழர்களின் தடாரி தோல் இசைக்கருவியின் வயது, 3,000ம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்திருக்கிறது.சங்ககாலப் பாணர் குடியை சேர்ந்தவர்களே, இன்றைய ஆதித்தமிழர்களான அருந்ததியர்கள் என்பதையும் இந்நுால் நிறுவியிருக்கிறது. தமிழை உயிராக கருதிய தமிழ் சமூகம், பாணர்களை கொண்டாடியது.பாணர்கள், யாழ் என்ற இசைக்கருவியின் வாயிலாக, தமிழை கொண்டு சென்றனர். இவர்கள் யாழ் இசைத்தவர்கள் மட்டுமல்ல, தடாரி என்ற தோல் இசைக்கருவியை இசைத்தவர்கள்.முல்லை நிலத்தின் குடிகளாக, மாங்குடி கிழார் குறிப்பிடும் துடியன், பாணன், பறையன், கடம்பன் என்ற நான்கு குடிகளில், பாணர் என்ற சங்ககாலக் குடியை சேர்ந்தவர்களே, ஆதித்தமிழர்களான அருந்ததியர்கள் என்பதை, இந்நுால் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் நாகராஜன், அருந்ததியர் சமுதாய மகாசபா தலைவர் நாகேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.