ஏன் அங்குமிங்கும் நடக்கிறாய்; கேட்ட உறவினருக்கு கல்லடி
கோவை; ராமநாதபுரம் பகுதியில் உறவினரை கற்களால் தாக்கிய வாலிபரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராமநாதபுரம், நாகப்பா வீதியை சேர்ந்தவர் சதீஷ் குமார், 35. இவர் தனது வீட்டில் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது, அவரது உறவினரான சோமசுந்தரம், 21 என்பவர் வீட்டின் முன் நீண்டநேரமாக சுற்றித்திரிந்தார். இதைப்பார்த்த சதீஷ் குமார், அது குறித்து சோமசுந்தரத்திடம் கேட்டுள்ளார். சோமசுந்தரம் மரியாதை குறைவாக பதிலளித்தார். இதை சதீஷ் குமார் கண்டித்ததால், சோமசுந்தரம் தகாத வார்த்தைகளால் திட்டினார். கீழே கிடந்த கற்களை எடுத்து, சதீஷ் குமாரை நோக்கி எறிந்தார். இதில், அவருக்கு காது, தலை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. அவரை கேட்டில் தள்ளி விட்டு, சோமசுந்தரம் தப்பினார். சதீஷ் குமார், ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, சோமசுந்தரத்தை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.