உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இடிந்த சாக்கடைகளுக்கு இனியாவது தீர்வு கிடைக்குமா?

இடிந்த சாக்கடைகளுக்கு இனியாவது தீர்வு கிடைக்குமா?

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. இரண்டாவது வார்டில் வெள்ளிப்பாளையம் சாலை, சீரங்கராயன் ஓடை, சரிப் நகர், எம்.ஆர்.டி., நகர் தோல் ஷாப், பாலாஜி நகர் உட்பட பத்துக்கும் மேற்பட்ட நகர் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. எவ்வித தொழில் நிறுவனங்களும் இல்லாததால், குடியிருப்பு பகுதிகள் அதிக அளவில் உள்ளன. இந்த வார்டு கவுன்சிலராக முகமது உசேன் இருந்தார். உடல் நலம் பாதித்து இறந்ததை அடுத்து, தற்போது இந்த வார்டில் கவுன்சிலர் இல்லாமல் உள்ளது. ஒரு நாள் விட்டு, ஒருநாள் மக்களுக்கு, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. போர்வெல்கள் வாயிலாக, 24 மணி நேரம் தண்ணீர் வழங்கப்படுகிறது. வீதிகளில் பொது குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. வெள்ளிப்பாளையம் சாலையில் புதிய கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது.இந்த வார்டில் பல வீதிகளுக்கு பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. புதிய தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: வார்டில் குடிநீர் பிரச்னை இல்லை. ஆனால் ஒவ்வொரு குடியிருப்பு பகுதிகளிலும், அமைத்துள்ள சாக்கடைகள் அமைத்து பல ஆண்டுகள் ஆகின்றன. அதனால் பல இடங்களில் சாக்கடைகள் இடிந்து விழுந்துள்ளன. சாக்கடைகளில் கழிவுநீர் செல்ல வழி இல்லாததால், ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கொசு தொல்லை அதிகமாக உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் இடிந்துள்ள, சாக்கடைகளை அகற்றி விட்டு, புதிதாக கட்ட வேண்டும். தினமும் சாக்கடையை சுத்தம் செய்ய, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் கூறியதாவது: இரண்டாவது வார்டில் அமைத்துள்ள சாக்கடைகள் அனைத்தும், 20, 25 ஆண்டுகளுக்கு முன் கட்டியதாகும். இந்த சாக்கடையை சுத்தம் செய்ய, தனியாக ஒரு தூய்மை பணியாளர் நியமித்து, தினமும், ஒவ்வொரு வீதியாக சுத்தம் செய்து வருகிறார். சிறுமுகை சாலையில் நகராட்சி எல்லை வரை, சாலை விரிவாக்கம் செய்து, சாக்கடை அமைக்கும்படி, நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அந்த திட்டம் நிறைவேறினால், கழிவுநீர் அனைத்தும் செல்ல வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை