உள்ளே வருமா? வெளியே நிற்கணுமா? சூலுார் பஸ் ஸ்டாண்டில் குழப்பத்தில் பயணிகள்
சூலுார் : சூலுார் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூர் பஸ்கள் செல்லாமல், திருச்சி ரோட்டிலேயே நின்று செல்வதால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.சூலுாரில் திருச்சி ரோட்டை ஒட்டி, புது பஸ் ஸ்டாண்ட் உள்ளது. திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருப்பூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள், இந்த பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும். ஆனால், பெரும்பாலான பஸ்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் வராமல், மெயின் ரோட்டிலேயே நின்று செல்வதால், பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:சொந்த ஊருக்கு செல்ல பஸ் ஸ்டாண்டுக்கு வந்தால், பஸ்கள் உள்ளே வருவதில்லை. மெயின் ரோட்டிலேயே சென்று விடுகிறது. உள்ளே இருந்து குழந்தைகளுடன் வெளியில் ஓட வேண்டி உள்ளது. எப்போ, எங்கே பஸ்கள் நிற்கும் என தெரியவில்லை. மெயின் ரோட்டில் வெயிலில் கால் கடுக்க நிற்க வேண்டியுள்ளது. பஸ் ஸ்டாண்டுக்குள் பஸ் வந்து பயணிகளை ஏற்றி சென்றால் நன்றாக இருக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர். வியாபாரம் முடக்கம்
பஸ் ஸ்டாண்டுக்குள் பஸ் வந்து செல்லாததால், வெறிச்சோடி கிடக்கிறது. வியாபாரமே இல்லாமல் கடை உரிமையாளர்கள் நஷ்டத்தை சந்திக்கின்றனர். அனைத்து பஸ்களும் உள்ளே வந்து சென்றால் தான், பயணிகளும் உள்ளே வருவார்கள். வியாபாரமும் ஓரளவுக்கு நடக்கும், என, கடை உரிமையாளர்கள் கூறினர். இப்பிரச்னைக்கு தீர்வு காண, மற்ற பஸ் ஸ்டாண்டுகளில் உள்ளது போல், போக்குவரத்து கழகத்தின் 'டைம் கீப்பர்' ஒருவரை நியமித்து கண்காணிக்க வேண்டும், என்ற கோரிக்கையையும் அவர்கள் விடுத்துள்ளனர்.