கொலை முயற்சி வழக்கில் கோர்ட்டில் சாட்சி விசாரணை
கோவை; கோவை, ராமநாதபுரம், அம்மன் குளம் பகுதியை சேர்ந்த நவீன்குமார்,26, என்பவர், 2020, ஜனவரியில், முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான விஜயகுமார், கண்ணன், ஹரிகரன், சக்திவேல் ஆகியோர், குண்டுவெடிப்பு வழக்கு தனிக்கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகி விட்டு, 2021ல் ஆக., 27ல், வெளியே வந்தனர். இவர்களில் ஹரிகரன், விஜயகுமார் ஆகியோரை ஆட்டோவில் வந்த ஒரு கும்பல், கோர்ட் அருகே கத்தியால் குத்தி கொல்ல முயன்றனர். இது தொடர்பாக, நவீன்குமாரின் தந்தை கருப்பசாமி, பிரவீன்குமார், சங்கர், அஜய்குமார், காமேஷ், பார்த்திபன், சதீஷ், சங்கர், ராஜ்குமார், கப்பீஸ்குமார் ஆகியோர், கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கில், கோவை இரண்டாவது கூடுதல் சார்பு கோர்ட்டில் நேற்று சாட்சி விசாரணை நடந்தது. தொடர்ந்து விசாரணை, வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.