கோவை ; தமிழகத்தின் பொருளாதார பங்களிப்பில், கோவைக்கு முக்கிய பங்கு உள்ளது. மேற்கு மண்டலத்தில் உள்ள ஒரே சர்வதேச விமானநிலையம் கோவையில் தான் உள்ளது. உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.அக்., மாதம் முதல், தினமும், 30 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் அதிகபட்சமாக, 64 விமான சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் தலா, 32 வருகை, புறப்பாடு அடங்கும். ஒரே நாளில், 4,678 பயணிகள் வருகை, 5,411 பயணிகள் புறப்பாடு என, 10 ஆயிரத்து, 089 பயணிகள் வந்து, சென்றது குறிப்பிடத்தக்கது.தலா, 28 உள்நாட்டு விமானங்கள் வந்து சென்ற நிலையில், தலா நான்கு சர்வதேச விமானங்கள் வந்து சென்றன.இதில், ஒரே நாளில் அதிகபட்ச சர்வதேச பயணிகள் எண்ணிக்கை பதிவானது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், இன்டிகோ நிறுவனம் அபுதாபி, சிங்கப்பூருக்கு விமானங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது. சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்தது இதற்கு காரணம். மேலும், கோவைக்கு, 81 சதவீத சர்வதேச பயணிகள் வந்த நிலையில், இங்கிருந்து, 90 சதவீத பயணிகள் உள்நாட்டுக்குள் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் சரக்கு போக்குவரத்தும் அதிகரித்துள்ளது.