10ம் வகுப்பு அறிவியல் தேர்வு ஈஸி; மாணவர்கள் உற்சாகம்
பொள்ளாச்சி; பத்தாம் வகுப்பு அறிவியல் பாட பொதுத்தேர்வு எளிமையாக இருந்ததால், மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதியுள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 28ம் தேதி துவங்கியது. முக்கிய பாடமான அறிவியல் தேர்வு நேற்று நடந்தது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, 50 மையங்களில் நடைபெற்று வருகின்றன. நேற்று அறிவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெற்றது.* தேர்வு குறித்து, பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி செண்பகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கருத்து:உதித் பாலாஜி: அறிவியல் தேர்வு எதிர்பார்த்ததை விட மிக எளிமையாக இருந்தது. முந்தைய தேர்வுகளில் திரும்ப, திரும்ப கேட்கப்பட்ட வினாக்களே வந்ததால் எளிமையாக இருந்தது. அனைத்து வினாக்களுக்கும் விடையளித்துள்ளேன். படித்த வினாக்களே கேட்கப்பட்டிருந்ததால் மகிழ்ச்சியுடன் தேர்வெழுதியுள்ளேன். முழு மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.ஜீவிகா: அறிவியல் தேர்வில் தெரிந்த வினாக்களே வந்ததால் எளிமையாக இருந்தது. அதில், கட்டாய வினா பகுதியில், நான்கு மதிப்பெண் வினாக்கள் மட்டும், பாடத்தில் உள் பகுதியில் இருந்து கேட்கப்பட்டு இருந்தன. அது சற்று கடினமாக இருந்தது. எனினும் முறையான பயிற்சி பெற்று இருந்ததால் அதையும் எழுதியுள்ளேன். முழு மதிப்பெண் கிடைக்கும்.* கிணத்துக்கடைவு கிட்ஸ் பார்க் பள்ளி மாணவர்கள் கருத்து:பிரியதர்ஷினி: அறிவியல் தேர்வு எளிமையாக இருந்தது. அரை மணி நேரத்திற்கும் முன்பாக தேர்வு எழுதி முடித்தேன். ஏழு மதிப்பெண் கேள்விகள் இரண்டு கேள்வி மட்டும் நான்கு மதிப்பெண் கேள்வியில் கேட்கப்பட்டிருந்தது. அனைத்து கேள்விகளுக்கும் பதில் எழுதி இருக்கிறேன். அதிக மதிப்பெண் கிடைக்கும்.அகல்யா: அறிவியல் தேர்வு எளிமையாக இருந்தது. பத்து நிமிடத்திற்கு முன் தேர்வு எழுதி முடித்து விட்டேன். பாடத்தின் உள்பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. இரண்டு மதிப்பெண் கேள்வி ஒன்று மட்டும் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்தது. அதையும் யோசித்து எழுதி உள்ளதால், முழு மதிப்பெண் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.* வால்பாறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர் கருத்து:லாவண்யா: அறிவியல் தேர்வை பொறுத்த வரை ரொம்ப எளிதாக இருந்தது. தேர்வுக்காக நன்றாக பயிற்சி எடுத்து படித்ததால் தேர்வை நல்ல முறையில் எழுத முடிந்தது. தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் அனைத்தும் எளிமையாக இருந்ததால் நல்ல முறையில் தெளிவாக எழுதியுள்ளேன். அதிக மதிப்பெண்கள் கிடைக்கும்.ஐஸ்வர்யா: அறிவியல் தேர்வில், வினாக்கள் கடினமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் வினாத்தாளை வாங்கிய பின் மகிழ்ச்சியாக இருந்தது. படித்த பாடத்தில் இருந்தும், ஆசிரியர்கள் குறிப்பிட்ட பகுதிகளில் இருந்தும் வினாக்கள் கேட்டகப்பட்டதால் தேர்வை உற்சாகமாக எழுதியுள்ளேன். நிச்சயம் சென்டம் வாங்கிவிடுவேன்.* உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் கருத்து:தாமினி: அறிவியல் தேர்வு கடினமாக வரும் என பயத்துடன்தான் தேர்வை எதிர்கொண்டோம். ஆனால், வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததால் உற்சாகமாக இருந்தது. அடிக்கடி பயிற்சி செய்த வினாக்கள் அதிகம் கேட்கப்பட்டிருந்தன. ஒரு மதிப்பெண், இரண்டு மற்றும் ஏழு மதிப்பெண் பகுதிகளிலும் வினாக்கள் நேரடியாகவே கேட்கப்பட்டிருந்தன. நான்கு மதிப்பெண் பகுதியில் மட்டும் ஒரு வினா குழப்பும் வகையில் இருந்தது.மனோ ப்ரியதர்ஷினி: அறிவியல் பொதுத்தேர்வில் அரையாண்டு மற்றும் பள்ளியில் நடத்திய திருப்புதல் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் அதிகம் இடம்பெற்றிருந்தன. இதனால் விரைவில் பதில் எழுத முடிந்தது. ஒரு மதிப்பெண் பகுதி எளிதாக இருந்தது. நெடுவினா பகுதியிலும் வினாக்கள் பயிற்சி செய்தவையாக இருந்ததால் பதட்டமில்லாமல் விடை எழுதினேன்.