உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கார் மோதி 13 மாணவர்கள் காயம்

கார் மோதி 13 மாணவர்கள் காயம்

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு அருகே, தேசிய நெடுஞ்சாலையை கடந்த தனியார் பள்ளி மாணவர்கள் மீது கார் மோதியதில், 13 பேர் படுகாயமடைந்தனர்.கிணத்துக்கடவு, ஏழூர் பிரிவில், பொள்ளாச்சி --- கோவை தேசிய நெடுஞ்சாலை அருகே, தனியார் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில், 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.நேற்று மாலையில், பள்ளி முடித்து மாணவர்கள் ரோட்டை கடந்த போது, கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற கார், மாணவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில், 13 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.விபத்து நடந்ததும், அங்கிருந்த மக்கள், காயமடைந்த மாணவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக கிணத்துக்கடவு, கோவை மற்றும் பொள்ளாச்சி மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, காரை ஓட்டிய பொறியியல் கல்லுாரி மாணவர் நந்தா கிஷோர், 19, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.

பாதுகாப்பில்லை!

பள்ளி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால், மாணவர்கள் அச்சத்துடன் ரோட்டை கடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால், பள்ளி அருகே, அடிக்கடி விபத்து நடக்கிறது. விபத்துகளை தடுக்க, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர்.மேலும், காலை மற்றும் மாலை நேரத்தில் போலீசார் இப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டு, வாகன வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, இப்பகுதியில் ரோட்டை கடக்க ஏதுவாக நடை மேம்பாலம் அமைக்க வேண்டும், என கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை