பூட்டிய வீட்டில் இருந்து 19 சவரன் நகை, வெள்ளி திருட்டு
கோவை : சிங்காநல்லுார் பகுதியில், வீட்டின் பின் பக்க கதவை உடைத்து, 19 சவரன் தங்க நகை, வெள்ளி கொலுசு திருடிச்சென்றவர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.சிங்காநல்லுார், இருகூரை சேர்ந்தவர் கபிலன், 29; தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 25ம் தேதி மாலை, தனது வீட்டை பூட்டி விட்டு சர்ச்சுக்கு சென்றார். இரவு 10:00 மணிக்கு வீடு திரும்பினார்.வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 19 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி கொலுசு திருட்டு போயிருந்தது.கபிலன், சிங்காநல்லுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார், கைரேகைகள் சி.சி.டி.வி., காட்சிகளை வைத்து, திருடர்களை தேடி வருகின்றனர்.கடந்த 15ம் தேதி சிங்காநல்லுார், ஒண்டிப்புதுாரை சேர்ந்த ராஜகுமார் என்பவரது வீட்டை உடைத்து, 16.5 சவரன் தங்க நகை திருடிச்சென்றது குறிப்பிடத்தக்கது.10 நாட்கள் இடைவெளியில், இரு திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதால், அப்பகுதி மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.