கேரளாவுக்கு கொண்டு சென்ற 2 டன் பிளாஸ்டிக் பறிமுதல்; ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பு
பொள்ளாச்சி : கேரளா மாநிலத்துக்கு வாகனத்தில் கொண்டு சென்ற, இரண்டு டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்து, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.பொள்ளாச்சி நகராட்சியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வப்போது ஆய்வு செய்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இருந்தால் பறிமுதல் செய்து அபராதம் விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், கடைக்காரர்களுக்கு கூட்டம் நடத்தி, பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியும் வருகின்றனர்.இந்நிலையில், கோட்டூர் ரோட்டில் பொள்ளாச்சி நகராட்சி சுகாதார அலுவலர் சுந்தர்ராஜ், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் ஊழியர்கள், கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியாக வரும் சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்து நகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். நகராட்சி கமிஷனர் கணேசன் ஆய்வு செய்து, விசாரணை செய்தார்.பிளாஸ்டிக் பொருட்களை கேரளாவுக்கு கொண்டு செல்வதாகவும், மளிகை பொருட்கள் பேக்கிங் செய்வதற்காக பயன்படுத்துவதாக தெரிவித்தனர்.நகராட்சி கமிஷனர் பேசுகையில், 'சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கிறோம்; நீங்கள் வியாபாரத்துக்காக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை விற்பது நியாயமா. அவை கால்வாய்களில் வீசப்படுவதால் அடைப்பு ஏற்படுகிறது. நகராட்சி ஊழியர்கள் தான் அவற்றை அகற்ற வேண்டிய நிலை உள்ளது.தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், தொடர்வது வேதனையான விஷயம். சுற்றுச்சூழலை காக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,' என்றார்.நகராட்சி கமிஷனர் நிருபர்களிடம் கூறுகையில், 'தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இரண்டு டன் அளவில் பறிமுதல் செய்யப்பட்டது. முதல் முறை என்பதால், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதே தவறை தொடர்ந்து செய்தால், போலீசில் புகார் அளிப்பதுடன்; துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், குடோனுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.