இடைநின்ற 23 மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு
கோவை; இடைநின்ற, 23 மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.மாவட்ட கல்வி ஆய்வுக்கூட்டம் கடந்த நவ., 28ம் தேதி நடந்தது. கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகித்தார். கூட்டத்தில், மாணவர்கள் வருகை சராசரி குறைவாக உள்ள பள்ளிகளின் பட்டியல் பெறப்பட்டது.இதன்படி, கோவை மாநகராட்சி குறிச்சி ஆரம்பப்பள்ளியில், ஒன்பது மாணவர்கள் இடைநின்றது தெரிந்தது. விசாரணையில், மாணவர்கள் குறிச்சியில் இருந்து கந்தசாமி நகர் பகுதிக்கு குடிபெயர்ந்தது தெரிந்தது. அவர்களை விசாரிக்க சென்ற போது, அப்பகுதியில் மேலும், 14 பேர் பள்ளியில் சேராமல் இருப்பது தெரிந்தது. இதையடுத்து மாணவர்களின் நலன் கருதி, 23 பேரும் மாநகராட்சி கந்தசாமி நகர் ஆரம்ப பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.