ஓராண்டில் 2,672 காச நோய் நோயாளிகள் கண்டுபிடிப்பு
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில், ஓராண்டில், 2,672 காச நோய் நோயாளிகளை கண்டறிந்தனர். ஈரோடு மாவட்ட காசநோய் மையம், சித்தோடு, சென்னிமலை, திங்களூர் என மாவட்ட அளவில் உள்ள வட்டாரங்களில், சிறப்பு முகாம் நடத்தியும், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளிலும் சளி பரிசோதனை செய்யப்பட்டது. இதில், மாவட்ட காசநோய் மையம் மூலம், 18,448 பேர், திங்களூர் வட்டாரத்தில், 14,598 பேர், சிறுவலுார் வட்டாரத்தில், 12,750 பேர், பிற வட்டாரங்களிலும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், திங்களூர் வட்டாரத்தில் அதிகபட்சமாக, 960 பேருக்கும், மாவட்ட காசநோய் மையம் மூலம், 756 பேருக்கும், சிறுவலுார் வட்டாரத்தில், 248 பேருக்கும், அத்தாணி வட்டாரத்தில், 145 பேர், ஐம்பை வட்டாரத்தில், 112 பேர், உக்கரம் வட்டாரத்தில், 141 பேருக்கும் பிற வட்டார பகுதிகளில், 100க்கும் குறைவானவர்களுக்கு காசநோய் கண்டறியப்பட்டது. மொத்தம், 1 லட்சத்து, 10,726 பேருக்கு சளி பரிசோதனையில், 2,672 பேருக்கு காசநோய் உறுதியானது. அதில், 2,377 நோயாளிகள் பதிவு செய்து, சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில், 1,340 பேர் குணமடைந்துள்ளனர். 16 பேர் சிகிச்சையை தொடரவில்லை. இவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில், 125 பேர் இறந்துள்ளனர் என்றும் திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.