ரூ.2.68 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணை பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, 2.68 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட தடுப்பணை, தமிழக முதல்வர் காணொலி வாயிலாக, பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.பொள்ளாச்சி, வடக்கிப்பாளையம் கோவில் அறக்கட்டளை நிலம் அருகே, கோதவாடி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணிக்கு, 2.68 கோடி ரூபாய் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.கோதவாடி ஓடை, கோவை - பொள்ளாச்சி ரோட்டின் கிழக்கு பகுதியில் கோதவாடி கிராமத்தில், கோதவாடி குளத்தில் இருந்து கோடங்கிபாளையம், நல்லட்டிபாளையம், பட்டணம், முள்ளுப்பாடி, வடக்கிப்பாளையம் கிராமம் வழியாக சென்று, கருமாண்டகவுண்டனுார் கிராமத்தில் கோரயைாற்றில் கலக்கிறது.கோதவாடி ஓடை நடுப்புணியில் கேரளா மாநிலத்தில் நுழைந்து, பாரதபுழா கிளையோடு இணைகிறது. இந்த ஆற்றின் குறுக்கே, வடக்கிப்பாளையம் கிராமத்தில் இந்த தடுப்பணை, 40 மீட்டர் நீளம், 1.65 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டது; 2,472 கனஅடி நீர் வெளியேற்றலாம். கொள்ளளவு, 0.45 மில்லியன் கனஅடியாகும்.இதன் வாயிலாக, தடுப்பணை அருகில் உள்ள, 10 திறந்தவெளி கிணறுகள், 20 ஆழ்துளை கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்கிறது. மேலும், 118 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, கிராமங்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த தடுப்பணையை, தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்றுமுன்தினம் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். தடுப்பணை பகுதியில் நடந்த நிகழ்ச்சியில், பி.ஏ.பி., பொள்ளாச்சி செயற்பொறியாளர் சுப்ரமணியம், உதவி செயற்பொறியாளர் சக்திகுமார், உதவி பொறியாளர்கள் ராஜன், வீரமணி மற்றும் பலர் பங்கேற்றனர்.