உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வடமாநிலத்தவர்களிடம் பணம் பறித்த ஆட்டோ ஓட்டுநர்கள் 3 பேர் கைது

வடமாநிலத்தவர்களிடம் பணம் பறித்த ஆட்டோ ஓட்டுநர்கள் 3 பேர் கைது

கோவை; ஆட்டோவில் சவாரிக்கு வரும் வடமாநிலத்தவர்களை குறிவைத்து, பணம் பறித்த ஆட்டோ ஓட்டுநர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை காரமடையை சேர்ந்த முகமது இக்பால், 54 என்பவரின் மனைவி குன்னுாரில் உள்ள ஒரு ஓட்டலில் பராமரிப்பாளராக வேலை செய்து வருகிறார். அவர் மேற்பார்வையில், 40க்கும் மேற்பட்ட வடமாநில நபர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அவரிடம் பணியாற்றும் கோல்கட்டாவை சேர்ந்த அலி காதர் சேக், விஷால் ஆகியோர் ஜூன், 17ம் தேதி மதியம் ரயிலில் கோவை வந்தனர். அங்கிருந்து ஊட்டி பஸ் ஸ்டாண்ட் செல்வதற்காக ஆட்டோ பிடித்தனர். ஆட்டோ சிறுது துாரம் சென்றவுடன், ஆட்டோ 'ரிப்பேர்' ஆகிவிட்டதாக கூறிய ஓட்டுநர் இருவரையும் வேறு ஒரு ஆட்டோவில் ஏற்றி விட்டார். அந்த ஆட்டோவில், டிரைவருடன், வேறு ஒரு நபரும் இருந்துள்ளார். இருவரும் சேர்ந்து, அலி காதர் சேக், விஷாலை மிரட்டி பணம் கேட்டனர். பணம் இல்லை என கூறியதையடுத்து 'ஜி பே' மூலம் அனுப்புமாறு மிரட்டி, ரூ.9 ஆயிரம் பறித்தனர். பின்னர், இருவரையும் காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் விட்டு சென்றனர். சம்பவம் குறித்து, ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநர்களான அன்னுாரை சேர்ந்த நவுபல் பாஷா, 29, செல்வபுரத்தை சேர்ந்த செந்தில்குமார், 33, உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது அசாருதீன், 25 ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில், கோவை ஈஷா யோகா மையத்தில் பணியாற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த தனபால், 34 என்பவருடன் வேலை செய்யும் வடமாநில வாலிபர்களான, முகமது அசார் அக்தர், சாதிக் அன்சாரி, ஷானவாஸ் ஆகியோர் தங்களது ஊருக்கு சென்று கடந்த 14ம் தேதி கோவை திரும்பினர். கோவை ரயில் நிலையம் வந்ததும் காந்திபுரம் செல்வதற்காக, 3 பேரும் ஆட்டோ பிடித்தனர். அந்த ஆட்டோ டிரைவர் அவர்கள் 3 பேரையும் ஏற்றி கொண்டு காந்திபுரம் செல்லாமல் வாலாங்குளம் -சுங்கம் ரோட்டில் அழைத்து சென்றார். அங்கு மேலும் இருவர் காத்திருந்தனர். அவர்களுடன் சேர்ந்து ஆட்டோ டிரைவர் வடமாநில தொழிலாளர்களை தாக்கி, ரூ. 4700 பணத்தையும், 'ஜி பே'வில் இருந்து ரூ.11 ஆயிரம் பணத்தையும் பறித்துக்கொண்டு மூவரையும் உக்கடத்தில் இறக்கி விட்டு சென்றனர். இது குறித்த தனபால் நேற்று முன்தினம் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், பாஷா, செந்தில் குமார், அசாருதீன் ஆகியோர் பணம் பறித்தது தெரியவந்தது. அவர்கள் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவதால், பிற ஆட்டோ டிரைவர்களும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ