மகளிர் உரிமைத்தொகை கேட்டு 320 பேர் மனு
அன்னுார்; ஒட்டர்பாளையம் ஊராட்சி பொதுமக்களுக்கு, மேகிணறு பிரிவில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது. முகாமை நுகர்வோர் வாணிப கழக மண்டல மேலாளர் துவக்கி வைத்தார். முகாமில் சிறப்பு திட்ட செயலாக்க துறை அரங் கில் மட்டும் மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாய் கோரி 320 பேர் மனு அளித்தனர். வருவாய், கூட்டுறவு, வேளாண், சமூக நலன், மாற்றுத்திறனாளிகள் துறை, ஊரக வளர்ச்சி துறை, கால்நடை பராமரிப்பு துறை, ஆதார் திருத்தம் உள்ளிட்ட 17 துறைகளுக்கும் சேர்ந்து 245 மனுக்கள் பெறப்பட்டன. மொத்தம் மனுக்கள் 565 மனுக்கள் பெறப்பட்டன. மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கும் சிறப்புத்திட்ட அரங்கம், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட ஐந்து துறைகளில் மட்டுமே மக்கள் இருந்தனர்.மற்ற துறைகள் எல்லாம் வெறிச்சோடி காணப்பட்டது. முகாம் குறித்து போதுமான விளம்பரம் செய்யப்படாததால் பங்கேற்ற மக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. முகாமில் தாசில்தார் யமுனா, பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் செந்தில் உள்பட பலர் பங்கேற்றனர்.