கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு 3,500 ரூபாய் போனஸ்
கோவை: மாநகராட்சியில் ஒப்பந்த முறையில் துாய்மை பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், மழைக்கால பேரிடர் மீட்பு குழுவினர், டிரைவர்கள், கிளீனர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள், பூங்கா பராமரிப்பாளர்கள், இரவு காவலர்கள் என பலரும் பணிபுரிகின்றனர். இவ்வகையில், 5,668 ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில், துாய்மை பணியாளர்கள் மட்டும் ஒரே தனியார் நிறுவனத்தின் கீழ் உள்ளனர். மற்ற ஒப்பந்த பணியாளர்கள், மண்டலம் வாரியாக வெவ்வேறு நிறுவனங்களுக்கு கீழ் பணியாற்றுகின்றனர். ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு நடப்பாண்டு தீபாவளி போனஸாக, 4,700 ரூபாய் வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு வழங்கப்படாமல் இருந்தது. அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், 20 சதவீத போனஸ் வழங்க வேண்டுமென தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர். இதை ஒப்பந்த நிறுவனமும், மாநகராட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில், கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு நேற்று 3,500 ரூபாய் போனஸ் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. இத்தொகை, தொழிலாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது.