உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆனைமலையில் 462 டன் நெல் கொள்முதல்

ஆனைமலையில் 462 டன் நெல் கொள்முதல்

ஆனைமலை: ஆனைமலை கொள்முதல் மையத்தில், இதுவரை, 462 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆனைமலையில், ஆழியாறு அணையிலிருந்து பாசனத்திற்கு வழங்கப்படும் நீரை பயன்படுத்தி, நெல், தென்னை உள்ளிட்ட சாகுபடிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அணையிலிருந்து ஆழியாறு ஆற்றில் திறக்கப்படும் நீரில், பழைய ஆயக்கட்டில், ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.நஞ்சை நிலமான இப்பகுதியில் மற்ற சாகுபடியை விட நெல் சாகுபடி செய்யவே விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை முதல் போகமும், செப்டம்பர் முதல் ஜனவரி மாதம் வரை இரண்டாம் போக நெல்சாகுபடியும் நடைபெறுகிறது.கடந்தாண்டு போதிய பருவமழை இல்லாததால், ஒரு போக சாகுபடி மேற்கொள்ளவே பாசனத்துக்கு நீர் கிடைக்காமல் விவசாயிகள் சிரமப்பட்டனர்.நடப்பாண்டு பருவமழை கை கொடுத்ததால், பாசனத்துக்கு தடையின்றி நீர் கிடைத்தது.இதனால், நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர். விளை நிலங்களில், ஏ.டி.டி., 36, ஏ.எஸ்.டி.,16, கோ, 51 உள்ளிட்ட பல்வேறு நெல் ரகங்களை சாகுபடி செய்தனர்.தற்போது, நெல் அறுவடை செய்யப்படுகிறது. இதையடுத்து, நெல் கொள்முதல் செய்ய அரசு சார்பில் கடந்த மாதம், தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகத்தின் சார்பில், நெல் கொள்முதல் மையம், ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் துவங்கப்பட்டது.அதில், கடந்தாண்டை விட, 100 ரூபாய் உயர்த்தி சன்னரகம் ஒரு குவிண்டால், 2,405 ரூபாய்; பொது ரகம் குவிண்டாலுக்கு, 2,450 ரூபாய், என, அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. மேலும், 17 சதவீதத்துக்குள் ஈரப்பதம் இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.நெல் கொள்முதல் மைய அதிகாரிகள் கூறுகையில், 'ஆனைமலையில் இதுவரை, 462 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 74 விவசாயிகள் பயன்பெற்றனர். கொள்முதல் செய்யப்பட்ட நெல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக கழகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது,' என்றனர்.

விலை உயர்த்துங்க!

விவசாயிகள் கூறியதாவது: நெல் கொள்முதல் மையம் துவங்கப்பட்டுள்ளது வரவேற்கதக்கது. சில நேரங்களில் கொள்முதல் செய்ய தாமதமாகிறது. உடனுக்கு உடன் நெல் கொள்முதல் செய்தால் பயனாக இருக்கும்.கேரளாவை போன்று, தமிழகத்திலும் நெல் கிலோவுக்கு, 30 ரூபாய் விலை கொடுத்தால் பயனாக இருக்கும். அதை விட விலை குறைவாக உள்ளதால் லாபம் கிடைப்பதில்லை.அரசு அடுத்த முறை கொள்முதல் செய்யும் போது, விவசாயிகளின் கோரிக்கையை மனதில் வைத்து விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி