49 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரால் அதிருப்தி; கூடுதல் ஆசிரியர் நியமிக்க வலியுறுத்தல்
பொள்ளாச்சி; பொள்ளாச்சி குமரன் நகர் பள்ளியில், 49 மாணவர்களுக்கு ஓராசிரியர் மட்டுமே கல்வி கற்பிக்கும் அவல நிலை நீடிக்கிறது. இதனால், வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெற்றோர், மாணவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட, குமரன் நகர் நகராட்சி தொடக்கப்பள்ளி கடந்த, 1982ம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இங்கு, 100 மாணவர்கள் வரை படித்து வந்தனர். தற்போது படிப்படியாக எண்ணிக்கை குறைந்து, 49 மாணவர்கள் படிக்கின்றனர்.பள்ளியில் ஆசிரியர்கள் போதுமான அளவு நியமிக்காததே இதற்கு காரணம் என குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையல், நேற்று, வட்டார கல்வி அலுவலகத்தை கவுன்சிலர் சையத் யூசப் தலைமையில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் முற்றுகையிட்டு, வட்டார கல்வி அலுவலர் குளோரின் ஸ்டெல்லாவிடம் மனு கொடுத்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது: பள்ளியில் தலைமையாசிரியர் வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெற்றதால், உதவி ஆசிரியை ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார். தற்போது, 49 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். அனைத்து குழந்தைகளையும் ஒரு ஆசிரியரால் தனி கவனம் செலுத்த இயலவில்லை.இதனால், குழந்தைகளின் ஒழுக்கமும், படிப்பும் கெடுகிறது. மாற்றுப்பணி ஆசிரியராக ஒரு தலைமை ஆசிரியர் வரும் வரை ஆசிரியரை நியமிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு வட்டார கல்வி அலுவலர், 'அரசு உத்தரவுப்படி தான் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.இந்த பதில் திருப்தியில்லை. மாணவர்களின் கல்வியோடு விளையாட வேண்டாம்; கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும், என தெரிவித்து கலைந்து சென்றனர்.பெற்றோர் கூறுகையில், 'பள்ளியில், 49 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் பாடம் நடத்துகிறார். அரசு உத்தரவுப்படி, 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும். அதற்கேற்ப ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்.ஆசிரியர்கள் இல்லாததால், பலரும், 'டிசி' வாங்கி மாற்று பள்ளியில் சேர்க்க முற்படுகின்றனர். இதற்கு தீர்வு காண வேண்டும்,' என்றனர்.
வசதிகள் இருக்கு... ஆசிரியரில்லை!
கவுன்சிலர் கூறுகையில், ''குமரன் நகரில், 44 ஆண்டுகளாக இரண்டு ஏக்கரில் பள்ளி செயல்படுகிறது. இங்கு, ஸ்மார்ட் கிளாஸ், கழிப்பிடம், மைதானம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. ஆனால், ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்கள் எண்ணிக்கை குறைகிறது.ஒரு ஆசிரியர், ஐந்து வகுப்புகளையும் கவனிப்பது சிரமமானது. இது பெற்றோரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியதால், 'டிசி' வாங்கி மாற்று பள்ளிக்கு செல்லும் நிலை உள்ளது.இப்பகுதியில், 250 குழந்தைகள் உள்ளனர்; அவர்கள் படிக்க வசதிகள் இருந்தும், ஆசிரியர் இல்லாதது குறையாக உள்ளது. இதை சரி செய்து கொடுக்க வட்டார கல்வி அலுவலரிடம் வந்தால், அரசு உத்தரவு வரும் வரை காத்திருங்கள் என்கிறார். இந்த பதில் ஏற்புடையதல்ல. எனவே, அரசு இப்பள்ளிக்கு, கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.