அங்கன்வாடி உதவியாளர்களுக்கு 5 நாட்கள் புதுப்பித்தல் பயிற்சி
பொள்ளாச்சி; அங்கன்வாடி உதவியாளர்கள், தங்களது திறமையை மேம்படுத்தவும், புதிய தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில், புதுப்பித்தல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் வாயிலாக, அங்கன்வாடி குழந்தைகளுக்கு, தரமான கல்வி மற்றும் சுகாதாரமான சேவையை வழங்க முடிவதுடன், குழந்தைகளின் வளர்ச்சிக்கும் உதவிகரமாக செயல்படுகின்றனர்.பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அங்கன்வாடி உதவியாளர்களுக்கான புதுப்பித்தல் பயிற்சி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின், தெற்கு வட்டார அலுவலகத்தில் நடக்கிறது. இதில், 50 அங்கன்வாடி உதவியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், குழந்தை மேற்பார்வையாளர் நிலை -1, வட்டார சுகாதார அலுவலர், சமூக நலத்துறை அலுவலர் உள்ளிட்டோர் பங்கேற்று பயிற்சி அளிக்கின்றனர்.குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வீணா கூறியதாவது:புதுப்பித்தல் பயிற்சி வகுப்பு, ஐந்து நாட்கள் நடத்தப்படுகிறது. இதில், உடல்நலம், ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரமான உணவுகள், மனித உறவுகள் மேம்பாடு, மனநலம் மற்றும் மன அழுத்தம் போக்க பயிற்சியளிக்கப்படுகிறது.மேலும், குழு உணர்வு மேம்பாடு, தகவல் தொடர்பு கலை, பணியாளர்களுக்கு உதவுதல், தன்சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி முகாம் நடக்கிறது. இதேபோல, அங்கன்வாடி பணியாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு, கூறினார்.