உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பருவ மழை எதிர்கொள்ள தயார் நிலையில் 6,000 பேர்

பருவ மழை எதிர்கொள்ள தயார் நிலையில் 6,000 பேர்

கோவை: வடகிழக்கு பருவ மழை பெய்யத் துவங்கியுள்ளது. நேற்று முன்தினம் கோவை நகர் பகுதியில் பெய்த மழைக்கு ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. பாதாள சாக்கடை குழாய் பதிக்க தோண்டிய ரோடு சேறும் சகதியமாக மாறியது. செல்வபுரம் பகுதிக்குள் நான்கு வீடுகள் மற்றும் எட்டு மாநகராட்சி பள்ளிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இப்பகுதிகளை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்து, மழை நீரை அகற்ற அறிவுறுத்தினார். பள்ளி நுழைவாயில் பகுதிகளில் தற்காலிக நடைபாதை ஏற்படுத்த பொறியியல் பிரிவினருக்கு உத்தரவிட்டார். சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்ட், லங்கா கார்னர், அவிநாசி ரோடு பழைய மேம்பாலம் சுரங்கப்பாதை, கிக்கானி பாலம், சோமசுந்தரா மில் பாலம் சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க கூடுதல் மின் மோட்டார்கள் மற்றும் மரம் அறுக்கும் இயந்திரங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. சாலையில் தண்ணீர் தேங்காமல் இருக்க, வடிகால்களின் பக்கவாட்டில் சிறிய அளவில் துளைகள் இடப்பட்டுள்ளன. துாய்மை பணியாளர்கள் சுகாதாரப் பணிகளை மேற்கொள்கின்றனர். வடிகால்களில் இருந்த அடைப்புகளை அகற்றினர். தேவையான இடங்களில் மருத்துவ முகாம் அமைக்க சுகாதாரத் துறையினர் தயாராக உள்ளனர். தீபாவளி பண்டிகை வரை கன மழை பெய்யும் என, வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். அதனால், மாநகராட்சி அதிகாரிகள் 24 மணி நேரமும் 'அலர்ட்'டாக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

'எட்டு பள்ளிகளுக்குள் தண்ணீர் புகுந்தது'

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''நேற்று முன்தினம் கன மழை பெய்தபோதிலும், சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்கவில்லை. பாதாள சாக்கடைக்கு தோண்டிய இடங்களில், 22 இடங்களில் தண்ணீர் தேங்கியது. அவை அகற்றப்பட்டு, ரோடு செப்பனிடப்படுகிறது. 8 பள்ளிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தற்காலிக ஏற்பாடாக நடைபாதை அமைக்கப்படுகிறது. துாய்மை பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் என, 6,000 பேர் தயாராக உள்ளனர்,'' என்றார்.

மழையால் பாதிப்பு ஏற்பட்டால் கூப்பிடுங்க

மாநகராட்சி அலுவலகம் - 0422 - 230 2323 வாட்ஸ் அப் - 81900 00200 வடக்கு - 89259 75980 மேற்கு - 89259 75981 மத்தியம் - 89259 75982 தெற்கு - 90430 66114 கிழக்கு - 89258 40945


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை