பிரதமரின் வரலாறு சொல்லும் 75 ஓவியங்கள்; கண்காட்சியை ரசித்த பொதுமக்கள்
கோவை; பிரதமர் மோடியின் 75 ஆண்டு கால வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில், 75 வண்ண ஓவியங்கள், கோவை மாநகர மாவட்ட பா.ஜ. சார்பில் அமைத்துள்ள கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். பிரதமர் மோடியின் தொழில்மகள் திட்டம், கோவை சத்தி ரோட்டில் தமிழ்நாடு பஸ் நிறுத்தம் அருகே உள்ள மைதானத்தில் இன்று நடக்கிறது. மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பங்கேற்கிறார். அங்கு, பிரதமர் மோடியின் 75வது ஆண்டு கால வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஓவியக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. பா.ஜ. மாநில பொது செயலாளர் முருகானந்தம் துவக்கி வைத்தார். அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடியின், 75 ஆண்டு கால வாழ்க்கையை, கோவையை சேர்ந்த ஓவிய கலைஞர் பரிதி ஞானம் தத்ரூப ஓவியங்களாகவரைந்துள்ளார். இவர் பல நாடுகளில் விருதுகளை பெற்றவர், குழந்தைகளுக்கான ஓவியங்களை வரைவதோடு, குழந்தைகளுக்கு இலவசமாக கற்றுக்கொடுத்து அடுத்த சந்ததியை ஊக்குவிக்கிறார். பிரதமர் குழந்தையாக இருந்தபோதிலிருந்து, தற்போது உலக அரங்கில் மிகப்பெரும் தலைவராக நிமிர்ந்து நிற்பது வரை உள்ள நிகழ்வுகளை, தத்ரூபமாக வரைந்துள்ளார். அவரது, 75 வயதை குறிப்பிடும் வகையில், 75 வண்ண ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஓவியங்கள், பிரதமரின் சுயசார்பு பாரதம் திட்டத்தின் கீழ், உள்ளூரில் உள்ள திறமையான ஓவிய கலைஞரை ஊக்குவிக்கும் வகையில், இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக ஓவியக்கலைஞர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார். மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.