உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் மாணவர்கள் 96.72% தேர்ச்சி! கல்லுாரியில் சேர்க்க ஆர்வம் காட்டிய பெற்றோர்

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் மாணவர்கள் 96.72% தேர்ச்சி! கல்லுாரியில் சேர்க்க ஆர்வம் காட்டிய பெற்றோர்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வில், 96.72 சதவீதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில், மாணவர்களை உயர்கல்வியில் சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டினர்.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை, சுல்தான்பேட்டை, மதுக்கரை உள்ளிட்ட ஏழு ஒன்றியங்களில் மொத்தம், 96 பள்ளிகள் உள்ளன.பிளஸ்2 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம், 36 மையங்களில் நடைபெற்றன. தேர்வுகள் முடிவடைந்த நிலையில் கடந்த மாதம் விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்து, கணினியில் மதிப்பெண் பதிவேற்றம் செய்யும் பணி நடந்தது. இந்நிலையில், நேற்று பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், மாணவர்கள் - 3,657, மாணவியர் - 4,230 என மொத்தம், 7,887 பேர் தேர்வெழுதினர். அதில், மாணவர்கள் - 3,487, (95.35 சதவீதம்)மாணவியர் - 4,141 (97.9 சதவீதம்)என, மொத்தம், 7,628 பேர் தேர்ச்சி பெற்றனர். 259 பேர் தேர்ச்சி பெறவில்லை. கல்வி மாவட்டத்தின் தேர்ச்சி, 96.72 சதவீதமாகும்.

அதிகரித்தது

கல்வி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் பள்ளி - 100 சதவீதம், உதவி பெறும் பள்ளிகள் - 99.18, நகராட்சி பள்ளிகள் - 94.58, பகுதி உதவி பெறும் பள்ளிகள் - 99.22, அரசுப்பள்ளிகள் - 93.65, மெட்ரிக் பள்ளிகள் - 99.70, சுயநிதி அண்டர் டி.எஸ்.இ., பள்ளிகள் - 95.26 என, மொத்தம், 96.72 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.கடந்தாண்டு, பொள்ளாச்சி கல்வி மாவட்டம், 95.59 சதவீதமாக இருந்த தேர்ச்சி சதவீதம், இந்தாண்டு, 1.13 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்டம் இலக்கு

பொள்ளாச்சி கல்வி மாவட்ட அதிகாரிகள் கூறுகையில், ''கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டது.படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு தனிக்கவனம் செலுத்தப்பட்டது.பள்ளிகளில், அவ்வப்போது ஆய்வு செய்து, உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்களின் கூட்டு முயற்சியால் அரசுப்பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. வரும் கல்வியாண்டில், கல்வி மாவட்டம், 100 சதவீதம் தேர்ச்சி பெற முயற்சிகள் எடுக்கப்படும்,'' என்றார்.

திட்டமிடல்

நேற்று பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும், மொபைல் வாயிலாக தேர்வு முடிவுகளை மாணவர்கள் பார்த்தனர். இதனால், பள்ளிகளில் மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டாலும், ஆசிரியர்கள், மாணவர்களின் மதிப்பெண்களை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டியதுடன் குறிப்பெடுத்தனர்.தேர்வு முடிவுகள் தெரிந்த கையோடு, பெற்றோர், தங்களது பிள்ளைகளை அழைத்துச்சென்று, கல்லுாரியில் சேர்க்க விண்ணபங்களை பூர்த்தி செய்ய ஆர்வம் காட்டினர். இதனால், பொள்ளாச்சியில் உள்ள கல்லுாரிகளில் கூட்டம் அலைமோதியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை