உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை கொண்டாடியவர்கள் மீது வழக்கு!

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை கொண்டாடியவர்கள் மீது வழக்கு!

கோவை;ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை கொண்டாடியவர்கள் மீது, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.அயோத்தியில் ராமர்கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கும்பாபிஷேகம் நடப்பதை முன்னிட்டு நாடு முழுவதும் கோவில்களில், சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.இதுதவிர, கும்பாபிஷேக நிகழ்ச்சி பல்வேறு பகுதிகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஏராளமானோர் கண்டு களித்தனர். தமிழகத்தில், ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்ய போலீசார் அனுமதிக்கவில்லை என, பா.ஜ., வினர் புகார் தெரிவித்தனர்.அதையும் தாண்டி, பல்வேறு பகுதிகளில், பா.ஜ., வினர் கும்பாபிஷேகத்தை நேரடி ஒளிபரப்பு செய்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ராமர் கோவில் முன், பா.ஜ., வினர் எல்.இ.டி., 'டிவி' வாயிலாக ஒளிபரப்பு செய்ய முயன்றனர். இதையடுத்து அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.இதுகுறித்து, ஆர்.எஸ்.புரம் போலீசார் பா.ஜ., தெப்பக்குளம் மண்டல் தலைவர் சுரேஷ்பாபு, உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.இதேபோல், கோவை ராமர் கோவில் வீதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., அலுவலகம் முன், ராமர் சிலை வைக்க முயன்ற, ஏழு பேர் மீது காட்டூர் போலீசார் வழக்கு பதிந்தனர்.குனியமுத்துார், கடைவீதி, வெரைட்டிஹால் ரோடு, காட்டூர், ரேஸ்கோர்ஸ், கவுண்டம்பாளையம், பீளமேடு, சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் உரிய அனுமதியின்றி, பட்டாசு வெடிக்க முயன்றதாக, 26 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ