காஸ் சிலிண்டர் வெடித்து தீப்பற்றிய வேன்
கோவை : கோவை உக்கடம் அருகில், காஸ் நிரப்பும் போது கசிவு ஏற்பட்டு, வேன் தீப்பற்றியது. கோவை, சிங்காநல்லுாரை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் கார்கள் வாங்கி, வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவர் ஆம்னி வேனை, உக்கடம் ஜி.எம்.நகர் பகுதியை சேர்ந்த, ஜாபர் சாதிக் என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை, ஜாபர் சாதிக் வேனை எடுத்துக்கொண்டு சென்றார். உக்கடம் - ஆத்துப்பாலம் சாலையில் உள்ள, 'டோட்டல் எனர்ஜி நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் மற்றும் பெட்ரோலியம் எரிவாயு பங்க்'ல் காஸ் நிரப்புவதற்காக நிறுத்தினார். காஸ் நிரப்பிக்கொண்டிருந்த போது, வேனின் முன்பகுதியிலிருந்து புகை வந்தது. இதை பார்த்த ஜாபர் சாதிக், வேனை ஓரமாக நிறுத்திவிட்டு ஓடினார். அடுத்த நொடி, வேனில் இருந்த காஸ் சிலிண்டர் வெடித்து, வேன் முழுவதும் தீப்பற்றி எரியத்துவங்கியது. வேன் பற்றி எரிவதை பார்த்த பங்க் ஊழியர்கள், மின் இணைப்பை 'ஆப்' செய்தனர். சம்பவம் குறித்து தெற்கு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.இதனிடையே, தீயணைப்பான் மூலம் தீயை அணைக்க, பங்க் ஊழியர்கள் முயன்றனர். ஆனால், அணைக்க முடியவில்லை. தகவல் கிடைத்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். வேன் தீப்பற்றியதும், மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக, தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.