வாகாவில் நடப்பதுபோல் அணிவகுப்பு; வ.உ.சி., மைதானத்தில் நடத்த ஏற்பாடு
கோவை; கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில், வ.உ.சி., மைதானத்தில் இன்று சுதந்திர தின விழா நடக்கிறது. காலை, 9:05 மணிக்கு, கலெக்டர் தேசியக்கொடியேற்றி, போலீசாரின் அணிவகுப்பை ஏற்றுக்கொள்கிறார். பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பதக்கங்களையும் வழங்குகிறார். இந்தியா - பாக்., எல்லையான வாகாவில் நடைபெறுவது போன்ற அணிவகுப்பை, கோவை மாநகர ஆயுதப்படை போலீசார் நடத்துகின்றனர். தொடர்ந்து, ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவ - மாணவியரின் பரதநாட்டியம், சி.எஸ்.ஐ., பெண்கள் பள்ளியின் லெசிம் நடனம், ஆர்.ஜே., மெட்ரிக் பள்ளி மாணவ மாணவியரின் தேச பக்தி பாடலுக்கான நடனம், அரசு மாதிரி பள்ளி மாணவ - மாணவியரின் கிளாசிக்கல் நடனம். சி.எம்.எஸ்., மெட்ரிக் பள்ளி மாணவ - மாணவியரின் தேச பக்தி பாடலுக்கான நடனம், வெஸ்டர்ன் ஹாட்ஸ் பள்ளியின் மல்லர் கம்பம், நேரு வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் நடனம், அவினாசிலிங்கம் உயர்நிலைப்பள்ளியின் நடனம், அவிலா கான்வென்ட் மெட்ரிக் பள்ளி மாணவ - மாணவியரின் நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அனைத்து அரசு துறைகளின் உயரதிகாரிகளும் பங்கேற்பர். ஆயுதப்படை போலீசாரின் மிடுக்கான அணிவகுப்பை பார்க்க, வ.உ.சி., மைதானத்துக்கு மக்கள் வரலாம்.