மாற்றுத்திறன் குழந்தைகளின் மனமகிழ்ச்சிக்காக ஒரு பூங்கா!
கோவை; ஆட்டிசம் உள்ளிட்ட அனைத்து மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான பிரத்யேக பூங்கா, காளப்பட்டி நேத்ரா நகரில், 1.25 ஏக்கர் பரப்பில் அமைகிறது. மாற்றுத்திறன், ஆட்டிசம் குழந்தைகளுக்கான இந்த ஒருங்கிணைந்த பார்க்கில், வீல்சேர் கூடைப்பந்து, சென்சரி பாதை, 30 வகையான விளையாட்டுக்கள், தண்ணீர் சார்ந்த விளையாட்டு உபகரணங்கள், அருவி போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை அதிகாரி சந்திரமோகன் கூறுகையில், '' இத்திட்டம் சி.எஸ்.ஆர்., நிதி வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. மாநகராட்சி சார்பில், 1.25 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. ஆட்டிசம் உட்பட அனைத்து மாற்றுத்திறன் குழந்தைகளும் பொழுதை கழிக்கும் வகையில், பிரத்யேக முறையில் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, 70 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. விரைவில் பயன்பாட்டுக்கு அனுமதிக்கும் வகையில், பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன, '' என்றார். போஷ் (bosch) நிறுவனம், ராக் அமைப்பு, மாநகராட்சி இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. கடந்த வாரம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் இங்கு ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.