ராணுவ தேர்வுக்கு வருவோர் செல்ல போலீஸ் வாகனம் ஏற்பாடு
கோவை; கோவையில் நடக்கும் ராணுவ தேர்வுக்கு வருவோர் வசதிக்காக போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின் வாகனங்கள் ஏற்பாடு செய்தார். ராணுவத்தில் காலியாக உள்ள 174 ராணுவ வீரர்கள், 50 கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வு கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் நவ., 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வில், தெலுங்கானா, குஜராத், கோவா, ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கின்றனர். தேர்வுக்கு வரும் இளைஞர்கள் ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் இறங்கி நடந்தே தேர்வு நடக்கும் இடத்திற்கு வருகின்றனர். மேலும், இரவில் சாலையோரங்களில், மேம்பாலங்களுக்கு கீழ் என பல இடங்களில் படுத்து உறங்குகின்றனர். அவர்களின் வசதிக்காக கோவை மாநகர போலீஸ் சார்பில், தங்குவதற்கு மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், அவர்கள் வந்து செல்ல வசதியாக, கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின் தனது அதிவிரைவு படை வாகனம் மற்றும் போலீஸ் வேன் ஆகியவற்றை அளித்துள்ளார். தேர்வு முடித்து வரும் இளைஞர்கள், சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையத்தில் இறக்கி விடப்படுகின்றனர்.