கோவை: கோவை நகரில், இரவில் ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த கல்லுாரி மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்த போதைக் கும்பல், உயிருக்கு போராடிய நிலையில் விட்டுவிட்டு தப்பிசென்றது. நேற்று அதிகாலை அவரையும், அரிவாளால் வெட்டப்பட்டுக் கிடந்த ஆண் நண்பரையும் மீட்ட போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். தமிழகத்தையே அதிர வைத்த இச்சம்பவத்தை அடுத்து, தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக, அரசியல் தலைவர்கள் பலரும் குற்றம்சாட்டியுள்ளனர். கோவை நகரிலுள்ள ஒண்டிபுதுாரைச் சேர்ந்த 25 வயது இளைஞர், மெக்கானிக் மற்றும் பைக் விற்பனை ஏஜென்சி நடத்துகிறார். இவருக்கு கோவை தனியார் கல்லுாரியில் முதுகலை, முதலாம் ஆண்டு பயிலும், மதுரையைச் சேர்ந்த 20 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நேற்றுமுன்தினம் இரவு 11:00 மணியளவில் கோவை விமான நிலையம் பின்புறம், பிருந்தாவன் நகரில் ஆள் நடமாட்டமில்லாத காட்டுப்பகுதிக்குச் சென்று காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது போதையில் வந்த மூவர் கும்பல், கார் கதவை தட்டி, இருவரையும் வெளியில் வருமாறு அழைத்தனர். அச்சமடைந்த இருவரும் கதவை 'லாக்' செய்து உள்ளே அமர்ந்து கொண்டனர். நீண்ட நேரமாகியும் திறக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த கும்பல் கார் கண்ணாடியை ஆயுதத்தால் அடித்து உடைத்து, இருவரையும் வெளியே இழுத்துப்போட்டி சரமாரியாக தாக்கியது. பெண்ணுடன் இருந்த இளைஞரை அரிவாளால் வெட்டியதில் அவருக்கு தலையில் காயமேற்பட்டு மயங்கி விழுந்தார். அதன்பின், அந்த மூவரும் மாணவியை மட்டும் ஒன்றரை கி.மீ., துாரம் தனியே தரதரவென இழுத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்தனர். இதில், அந்த மாணவி மயக்க நிலைக்குச் சென்றார். நள்ளிரவில் மாணவியை அப்படியே விட்டு, விட்டு மூவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். அதிகாலை 3:00 மணியளவில், வெட்டுப்பட்டுக்கிடந்த இளைஞருக்கு சுயநினைவு திரும்பியது. போனில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து அவசர உதவி கோரினார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பீளமேடு போலீசார் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் அளித்த தகவலின் பேரில், மாணவியை சம்பவ இடத்தின் அருகிலுள்ள பகுதிகளில் போலீசார் தேடினர். இரண்டு மணி நேர தேடலுக்குப் பின், கார் நின்றிருந்த இடத்தில் இருந்து ஒன்றரை கி.மீ.,க்கு அப்பால் மாணவி, ஆடையின்றி மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்ட போலீசார், தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்; அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரிக்கின்றனர். தப்பிய குற்றவாளிகளை பிடிக்க கோவை மாநகர போலீஸ் வடக்கு துணை கமிஷனர் தேவநாதன் தலைமையில், 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கு மண்டல ஐ.ஜி.,செந்தில்குமார் கூறுகையில், ''மூன்று கோணங்களில் விசாரிக்கிறோம். அப்பகுதியில் வழக்கமாக சுற்றித்திரியும் சிலரிடம், சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடக்கிறது. விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம்,'' என்றார். இளம்பெண்கள், குறிப்பாக மாணவியர் கும்பலால் பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்க காரணம், போலீஸ் மீது குற்றவாளிகளுக்கு பயம் நீங்கி விட்டதுதான் என, எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அரசியல்வாதிகளின் ஆதரவு இருப்பதால்தான், குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் சிக்கினாலும், தண்டனையில் இருந்து தப்பி விடுகின்றனர் என்பது, சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
'மொபட்'டில் வந்தனர்?
மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இடத்தில், கார் அருகில் மொபட் ஒன்று கிடந்தது. அதை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். அந்த மொபட், அன்னுார் கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் திருடப்பட்டது தெரிந்தது. மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள், அந்த மொபட்டில் வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், போலீசார் விசாரிக்கின்றனர்.