சிறுமுகை வனப்பகுதியில் உடல் நலம் தேறி வரும் காட்டு யானை
மேட்டுப்பாளையம்; உணவு, மருந்து வழங்குவதால் சிறுமுகை காட்டுப்பகுதியில் நோய்வாய்ப்பட்ட ஆண் காட்டு யானை உடல் நலம் தேறி வருகிறது. சிறுமுகை அடுத்துள்ள பெத்திக்குட்டை காப்புக்காடு பகுதியில், உடல் மெலிந்த நிலையில் சோர்வுடன் ஒரு ஆண் காட்டு யானை கடந்த 25ந் தேதி கண்டறியப்பட்டது.இதையடுத்து, சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ், அரசு வன கால்நடை மருத்துவ அலுவலர் மற்றும் வனப்பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். இதில் யானையின் உடலில் காயங்கள் எதுவும் காணப்படவில்லை. உடல் மெலிந்து காணப்பட்டதால் உள் உறுப்புகள் ஏதாவது பாதிக்கப்பட்டு நோய் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என வனத்துறையினர் உறுதி செய்தனர். அந்த யானைக்கு ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள், வலி நிவாரணி மாத்திரைகள், குடற்புழு மாத்திரைகள் மற்றும் கல்லீரல் புத்துணர்வு வைட்டமின் டானிக் ஆகியவற்றை, தர்பூசணி மற்றும் வாழைப்பழத்தில் வைத்து கொடுத்தனர். யானை நகரும் இடங்களில் அதற்கு பிடித்தமான தென்னை ஓலை, மசாலா புல், புளியன் இலை, கூந்தப்பனை போன்ற பசுந்தீவனங்களையும் வைத்தனர். இதனை யானை உண்டு தற்போது ஓரளவு தெம்புடன் காணப்படுகிறது. இதனிடையே நேற்று முன் தினம் இரவு நோய்வாய்பட்ட யானை அருகில் இரண்டு காட்டு யானைகள் சென்றன. ஆனால் அவை தொந்தரவு செய்யவில்லை. சிறிது நேரம் கழித்து 2 யானைகளும் காட்டுக்குள் சென்று விட்டன. உணவு, மருந்து வழங்குவதால் உடல் நலம் தேறி வரும் யானை, விரைவில் காட்டுக்குள் சென்றுவிடும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிறுமுகை வனச்சரகர் மனோஜ் கூறுகையில் காட்டு யானைக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் மருத்துவகுழுவினருடன் இணைந்து செய்து வருகின்றோம். யானையின் உடல் நலம் தொடர்ந்து தேறி வருகிறது. நோய்வாய்பட்ட யானையை மற்ற காட்டு யானைகள் இடையூறு செய்யாமல் கண்காணித்து வருகிறோம், என்றார்.------