நடக்க முடியாமல் அவதிப்படும் காட்டு யானை
மேட்டுப்பாளையம் : சிறுமுகை வனப்பகுதியில் உடல் நலம் பாதித்த ஆண் யானைக்கு, ஆறாவது நாளாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இருந்தபோதிலும் அது நடக்க முடியாமல் அவதிப்படுகிறது.சிறுமுகை வனப்பகுதியில் மூலையூர், கூத்தாமண்டி பிரிவு வனப் பகுதியில், ஒரு ஆண் யானை, உடல் நலம் பாதித்து நடக்க முடியாமல் ஒரே இடத்தில் நிற்கிறது.தகவல் அறிந்த சிறுமுகை வனத்துறையினர், யானையை கண்காணித்து மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட வனத்துறை கால்நடை டாக்டர் சுகுமார் தலைமையில், யானைக்கு சிகிச்சை அளிக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. யானைக்கு தேவையான சத்து மருந்து, மாத்திரைகளையும், ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரைகளையும், வலி நிவாரண மாத்திரைகள், குடற்புழு நீக்கம் மாத்திரைகளை தர்ப்பூசணி, வாழைப் பழங்களில் வைத்து யானைக்கு வழங்கி வருகின்றனர். உணவு பொருட்களை நன்கு மென்று சாப்பிடுகிறதா என, தெரிந்து கொள்ள, கரும்பை கொடுத்து வருகின்றனர். இருந்த போதும் யானை அதிக தூரம் நடக்காமல், சிறிது தூரம் நடப்பதும், பின்பு படுத்துக் கொள்வதுமாக இருந்து வருகிறது.இது குறித்து சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் கூறியதாவது: ஆண் யானைக்கு தொடர்ந்து ஆறாவது நாளாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருந்து, மாத்திரைகள், பழங்கள், தீவனம் ஆகியவை வழங்கி வருகிறோம். சாப்பிடும் உணவுப் பொருட்கள் நன்கு ஜீரணம் ஆகிறதா என, அதன் எச்சத்தை ஆய்வு செய்தோம். அதுவும் நன்றாக உள்ளது என டாக்டர் தெரிவித்தார். இருந்த போதும் நடக்க முடியாமல், ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்கிறது. எதனால் நடக்காமல் ஒரே இடத்தில் நிற்கிறது என்பதை கண்டறிய, அடுத்த கட்டமாக காலில் ஏதாவது பாதிப்பு உள்ளதா என, ஆய்வு செய்ய உள்ளோம். இவ்வாறு வனச்சரக அலுவலர் கூறினார்.