சூலுார், கருமத்தம்பட்டியில் ஆதார் மையங்கள் திறப்பு
சூலுார்: சூலுார் மற்றும் கருமத்தம்பட்டியில், 'எல்காட்' சார்பில் நிரந்தர ஆதார் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. சூலுார் மற்றும் கரூமத்தம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், ஆதார் கார்டில் திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, சூலுார் தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்துக்கு தான் வரவேண்டியுள்ளது. தபால் துறையுடன் இணைந்து தனியார் அமைப்புகள் சார்பில் ஆதார் முகாம் நடத்தப்பட்டால், கூட்டம் அதிகமாக இருக்கும் நிலை இருந்தது. கூடுதல் ஆதார் மையங்கள் திறக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், 'எல்காட்' நிறுவனம் சார்பில், கருமத்தம்பட்டி நகராட்சி அலுவலக வளாகம் மற்றும் சூலூர் யூனியன் அலுவலக வளாகத்தில் உள்ள அறைகளில், நிரந்தர ஆதார் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பணிகள் முடிந்து திறப்பு விழாவுக்காக தயாராக இருந்தது. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நேற்று காணொளி காட்சி வாயிலாக, ஆதார் மையங்களை திறந்து வைத்தார். இரு இடங்களில் நிரந்தர ஆதார் மையங்கள் திறக்கப்பட்டுள்ளதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.