உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆடி அமாவாசை; கோவில்களில் சிறப்பு பூஜை; ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ஆடி அமாவாசை; கோவில்களில் சிறப்பு பூஜை; ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

- - நிருபர் குழு -பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொள்ளாச்சி அருகே, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர் பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர். சூலக்கல் மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தங்க கவச அலங்காரத்தில், ஜோதிலிங்கேஸ்வரர் அருள்பாலித்தார். டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில் மாலை, 5:30 மணிக்கு பக்த ஆஞ்சநேயருக்கு, பால், தயிர், தேன், இளநீர், திருமஞ்சன பொடி, மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட அபிேஷக வழிபாடு நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவில், அழகு நாச்சியம்மன் கோவில் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடுகள் நடைபெற்றன. தர்ப்பணம் ஆடி அமாவாசை நாளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு எள் மற்றும் அரிசி மாவால் செய்யப்பட்ட பிண்டங்களை வைத்து தர்ப்பணம் கொடுப்பது, அவர்களின் ஆசிகளைப் பெற்று குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஐதீகம். இதை முன்னிட்டு, பொள்ளாச்சி அருகே, அம்பராம்பாளையம் ஆற்றங்கரையில் ஏராளமானோர், குடும்பத்துடன் சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். வாழை இலைகளில் எள், அரிசி மாவுப் பிண்டம், வாழைப்பழம், வெற்றிலை, ஊதுபத்தி வைத்து சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர். இதேபோன்று, ஆனைமலை, ஆழியாறு, பாலாறு உள்ளிட்ட ஆற்றங்கரைகளில் மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். உடுமலை உடுமலை திருமூர்த்திமலை பாலாற்றங்கரையில், அதிகாலை முதலே நுாற்றுக்கணக்கான மக்கள், தர்ப்பணம் கொடுத்து, வழிபட்டனர். பாலாற்றில் நீராடவும், அமணலிங்கேஸ்வரர் கோவிலில் வழிபடவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். கோவில் பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். உடுமலையில் இருந்து கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதே போல், கொழுமம் அமராவதி ஆற்றங்கரையிலும் திரளான மக்கள், தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வழிபட்டனர். போதிய இடவசதி இல்லாதததால், வாகனங்களை ரோட்டிலேயே நிறுத்தி சென்றனர். கொழுமம் காசி விஸ்வநாதர் கோவில், தாண்டேஸ்வரர் கோவில், கோட்டை மாரியம்மன் கோவில், திருமூர்த்திநகர் வனதுர்க்கை அம்மன் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ