உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை ரோட்டில் விபத்துகள்; இருவர் பலி.. 108 ஆம்புலன்ஸ் கவிழ்ந்து இருவர் காயம்

கோவை ரோட்டில் விபத்துகள்; இருவர் பலி.. 108 ஆம்புலன்ஸ் கவிழ்ந்து இருவர் காயம்

கிணத்துக்கடவு; பொள்ளாச்சி --- கோவை தேசிய நெடுஞ்சாலையில், கிணத்துக்கடவுக்கு உட்பட்ட ஏலூர் பிரிவு, கோதவாடி பிரிவு மற்றும் கல்லாங்காட்டுபுதூர் ஆகிய மூன்று இடங்களிலும் விபத்து நடந்தது. இதில் இருவர் காயமடைந்தனர், இருவர் பலியானார்கள்.திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் முரளிதரன், 20. இவர், கிணத்துக்கடவு அருகே உள்ள வி.எஸ்.பி., இன்ஜினியரிங் கல்லூரியில், மூன்றாம் ஆண்டு பி.டெக்., படித்து வந்தார். இவர் அரசம்பாளையம் பகுதியில் வீடு எடுத்து தங்கியிருந்தார்.இவர், காலையில் அப்பாச்சி பைக்கில் கல்லூரி செல்லும் போது, இவரின் முன்னாள் பயணியர் ரோட்டை கடந்துள்ளனர். அப்போது, முன்னாள் சென்ற பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த முரளிதரனை அங்கிருந்தோர் மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.* கோவை, துடியலூரை சேர்ந்தவர் சந்தோஷ், 22, கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர், நேற்று காலை கோவை --- பொள்ளாச்சி ரோட்டில் கிணத்துக்கடவு, கோதவாடி பிரிவு அருகே பைக்கில் சென்ற போது, எதிர் திசையில் கேரளாவை சேர்ந்த ராஜேஷ், 36, ஓட்டி வந்த பால் வேன், சந்தோஷ் மீது மோதி விபத்து நடந்தது. இதில், சம்பவ இடத்திலேயே சந்தோஷ் உயிரிழந்தார்.* இதே போன்று, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு '108' ஆம்புலன்ஸ் வாயிலாக, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நோயாளியை அழைத்து சென்றனர். ஆம்புலன்சை மதுரையை சேர்ந்த முத்துக்குமார், 30, ஓட்டினார். அவருடன், செவிலியர் ஷாலினி, 27, இருந்தார்.நோயாளியை மருத்துவமனையில் விட்டு விட்டு பொள்ளாச்சி நோக்கி வந்தனர். அப்போது, கிணத்துக்கடவு, கல்லாங்காட்டுபுதூர் அருகே ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் உள்ள இரும்பு தடுப்பு மீது மோதி ரோட்டில் கவிழ்ந்தது.விபத்தில், இருவரும் லேசான காயங்களுடன் தப்பினர். இதை கண்ட அவ்வழியே சென்றவர்கள் மற்றும் போலீசார் ஆம்புலன்சை அப்புறப்படுத்தினர். மேலும், காயமடைந்த இருவரையும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்துகள் குறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை