வாக்காளர் பட்டியலில் துல்லியம்!: அதிகாரிகளுக்கு அறிவுரை
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளுக்கும் தவறில்லாத, துல்லியமான வாக்காளர் பட்டியல் தயாரிக்க, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.கோவை மாவட்டத்தில், 100 சதவீதம் தவறில்லாத, துல்லியமான வாக்காளர் பட்டியல் தயாரிப்பது மற்றும், 1,200 வாக்காளர்களுக்கு ஒன்று வீதம் ஓட்டுச்சாவடிகளை பிரிப்பது தொடர்பான பயிற்சிகூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.சட்டசபை தொகுதி வாரியாக தேர்தல் நடத்த உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தாசில்தார்கள் பங்கேற்றனர். வாக்காளர் பட்டியல் தயாரிப்பது மற்றும் ஓட்டுச்சாவடிகளை பிரிப்பது தொடர்பாக, மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் அறிவுரை வழங்கினார்.10 சட்டசபை தொகுதிகளில், 31 லட்சத்து, 85 ஆயிரத்து, 594 வாக்காளர்கள் உள்ளனர். லோக்சபா தேர்தலில் 3,117 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன. 1,200 வாக்காளர்களுக்கு மேலாக, 897 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.இவற்றை பிரிக்கும்போது, 4,014 என்கிற எண்ணிக்கையில் அமைக்க வேண்டிய சூழல் ஏற்படும். 100 மற்றும், 120 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் வசிப்பிடங்களுக்கு, நேரில் சென்று உறுதிப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் எண்ணிக்கை, விடுபட்டோரின் பெயர்களை சேர்க்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருடன் ஆலோசிக்கப்பட்டது.குடிபெயர்ந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்குதல், 18 வயதான இளம் வாக்காளர்களை சேர்த்தல், அனைத்து கல்லுாரிகளிலும் சிறப்பு முகாம் நடத்தி, மாணவ - மாணவியரை பட்டியலில் தவறாமல் சேர்த்தல், பழங்குடியின வாக்காளர்களின் பெயர் சேர்த்தல் ஆகியவற்றுக்கு நடவடிக்கை எடுக்க, கலெக்டர் அறிவுறுத்தினார்.