பதிவு பெறாத தொழிலாளர்கள் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை
கோவை; மோட்டார் போக்குவரத்துத் தொழிலாளர் சட்டத்தின் கீழ், பதிவு பெறாத தொழிலாளர்களை பணிக்கு வைத்திருந்த 9 கல்வி நிறுவனங்கள் மீது, தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.பள்ளி, கல்லூரிகள், லாரி சர்வீஸ், தனியார் மக்கள் போக்குவரத்து நிறுவனத்தில் பணிபுரியும் வாகன ஓட்டுநர், நடத்துநர்களை, 1961 மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டம், 1965 தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் விதியின் கீழ் பதிவு செய்து, சான்று பெற வேண்டும். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்.கோவை, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காயத்ரி தலைமையில், கோவை மாவட்டத்தில் உள்ள, 34 கல்வி நிறுவனங்களில் ஆய்வு நடந்தது.இதில், 9 நிறுவனங்களில், பதிவுச் சான்று பெறாதது, பதிவேடுகள் பராமரிக்காதது தொடர்பாக முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, வழக்கு பதியப்பட்டுள்ளது.கடந்த 2 ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்ட, கல்வி நிறுவனங்கள் தாமாக முன்வந்து உரிய கட்டணம் செலுத்தி, பதிவு செய்துள்ளனர்.பதிவுச் சான்று பெறாமல் வாகனங்களை இயக்குவது குற்றம். எனவே, பதிவுச் சான்று பெறாத கல்வி நிறுவனங்கள் இணையவழியில் விண்ணப்பித்து, நடவடிக்கையைத் தவிர்க்க வேண்டும் என, தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.