மேலும் செய்திகள்
கல்வி இயக்குனர் உத்தரவு காற்றில் பறக்கிறது
26-Dec-2025
கோவை அரையாண்டு விடுமுறை காலத்தில் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும், விதியை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரி( தனியார் பள்ளிகள்) நந்தகுமார் கூறுகையில், ''மாவட்டத்தில் செயல்படும் சில தனியார் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வுக்கான சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில், விடுமுறை நாட்களிலும் கட்டாயப்படுத்தி வகுப்புகள் நடத்தப்படுவதாக புகார்கள் ஏழுந்துள்ளன. அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என்று அனைத்து தனியார் பள்ளி முதல்வர்களுக்கும் மாவட்ட கல்வி அலுவலகம் சார்பில் ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. புகார்கள் வரப்பெறும் பள்ளிகளை தொடர்பு கொண்டு, வகுப்புகளை உடனடியாக நிறுத்தும்படி தற்போதும் அறிவுறுத்தி வருகிறோம். பொதுத்தேர்வில் நூறு சதவீத தேர்ச்சியை பெற வேண்டும் என்ற நோக்கில், படிப்பில் சற்று பின்தங்கிய மாணவர்களுக்காகவே இந்த வகுப்புகள் நடத்தப்படுவதாகப் பள்ளி நிர்வாகங்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும், விடுமுறை நாட்களில் மாணவர்களைக் கட்டாயப்படுத்திப் பள்ளிக்கு வரவழைப்பது விதிமுறைப்படி தவறானது. பள்ளிக்கல்வி உத்தரவை மீறி, அரையாண்டு விடுமுறையில் தொடர்ந்து சிறப்பு வகுப்புகளை நடத்தும் தனியார் பள்ளிகள் மீது விளக்கம் கேட்கப்படும்; அந்த பள்ளிகள் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
26-Dec-2025