மேம்பாலத்தில் பறந்தால் நடவடிக்கை பாயும்! ஊருக்குள் செல்லாத பஸ்களுக்கு எச்சரிக்கை
பொள்ளாச்சி; 'நிறுத்தங்களில் பஸ்களை நிறுத்தாமல், மேம்பாலம் வழியாக சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, ஆலோசனை கூட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்தார். பொள்ளாச்சி அருகே கோமங்கலம்புதுாரில், பஸ்களை நிறுத்தம் செய்யாமல் செல்வதை கண்டித்து பொதுமக்கள் கடந்த, 17ம் தேதி மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் பேச்சு நடத்தி, வட்டார போக்குவரத்த அலுவலர் தலைமையில் கூட்டம் நடத்தி தீர்வு காணலாம் என தெரிவித்ததால் பொதுமக்கள் சமரசம் அடைந்து கலைந்து சென்றனர். அதன்படி, பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கூட்டம் நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர் செழியன் தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.பொதுமக்கள் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் பங்கேற்றனர். பொதுமக்கள் பேசியதாவது: கோமங்கலம்புதுாரில், 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். சங்கம்பாளையம், கூளநாயக்கம்பட்டி, கோலார்பட்டி, மலையாண்டிபட்டிணம், கோமங்கலம், பீக்கல்பட்டி, கோழிகுட்டை உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் இந்த பஸ் நிறுத்தை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், போலீஸ் ஸ்டேஷன், பத்திரப்பதிவு அலுவலகம், அரசு மேல்நிலைப்பள்ளி, ரயில் நிலையம் உள்ளிட்டவை உள்ளன. கோமங்கலம் பஸ் நிறுத்தத்தில் அனைத்து தனியார் மற்றும் அரசு பஸ்களும் நின்று செல்ல வேண்டும் என அரசாணை உள்ளது. ஆனால், பெரும்பாலான தனியார் பஸ்கள் நிற்பதில்லை. தினமும், கோமங்கலம் செல்வதற்கு பஸ்சில் ஏறும் பயணியரிடம் நடத்துனர்கள் வாக்குவாதம் செய்து இறக்கி விடுவது வாடிக்கையாகியுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் கோமங்கலம்புதுார் பஸ் நிறுத்தம் அருகே புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் வழியாக தனியார் பஸ்கள் செல்கின்றன. பஸ் நிறுத்தத்துக்கு வராமல் செல்வதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு, பேசினர். வட்டார போக்குவரத்து அலுவலர் பேசியதாவது: கோவையில் இருந்து, பழநி வரை செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஒத்தக்கால்மண்டபம், மலுமிச்சம்பட்டி, கிணத்துக்கடவு, ஊஞ்சவேலம்பட்டி, திப்பம்பட்டி, கோமங்கலம் புதுார் உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட பஸ் நிறுத்தங்களில் நின்று செல்ல வேண்டும். குறிப்பாக, அனைத்து பஸ்களும் சர்வீஸ் ரோட்டில் உள்ள பஸ் நிறுத்தத்தில் வந்து நிறுத்த வேண்டும். தவறும் பஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, பேசினார்.
சர்வீஸ் ரோட்டில் ஆய்வு!
பஸ் உரிமையாளர்கள் பேசுகையில், 'கோமங்கலம்புதுார் அருகே மேம்பால பணிகள், சர்வீஸ் ரோடு பணிகள் நடைபெறுகின்றன. சர்வீஸ் ரோடு குறிப்பிட்ட துாரம் இணைக்காததால், ஒரே வழியில் செல்வதால் போக்குவரத்து நெரிசல், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டும்,' என்றனர். இதையடுத்து, வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில், அதிகாரிகள், பஸ் உரிமையாளர்கள், பொதுமக்கள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். வட்டார போக்குவரத்து அலுவலர் கூறுகையில், ''சம்பவ இடத்தில் ஆய்வு செய்யப்பட்டது. சர்வீஸ் ரோடு குறிப்பிட்ட துார பணிகளை விரைந்து முடிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டது. உடனடியாக பணிகளை செய்து கொடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,' என்றார்.