உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 90 இடங்களில் மீட்பு மையங்கள் போதிய வசதி: அமைச்சர் தகவல்

90 இடங்களில் மீட்பு மையங்கள் போதிய வசதி: அமைச்சர் தகவல்

கோவை : கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், தொடர்ந்து பெய்து வரும் கன மழையால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதை பார்வையிட்ட, தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:மழை பாதிப்பை தடுக்க, தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டதால், பெரியளவில் பாதிப்பு இல்லை. சில இடங்களில் எட்டு வீடுகள் பாதிப்படைந்துள்ளன. சிறிய காயங்கள் ஏற்பட்டு, சிகிச்சை பெற்ற இரண்டு பேர் வீடு திரும்பியுள்ளனர்.வாழை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன; விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க, 26 லட்சம் ரூபாய்க்கு மாவட்ட நிர்வாகம் கருத்துரு அனுப்பியுள்ளது. 90 இடங்களில் மீட்பு மையங்கள் அமைக்கப்பட்டு, தேவையான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. ஒரே ஒரு இடத்தில் மட்டும், 100 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நீர் வழங்கு வாய்க்கால்களை முன்னரே துார்வாரியதால், பிரச்னைகள் ஏற்படவில்லை. எந்த வீட்டுக்குள்ளும் தண்ணீர் செல்லவில்லை. மழை காலம் என்பதால், குண்டும் குழியுமாக உள்ள ரோட்டில் 'பேட்ச் ஒர்க்' செய்யாமல் உள்ளனர். மழை நின்றதும் 'பேட்ச் ஒர்க்' செய்யப்படும். ரோடு போட வேண்டிய இடங்களில் கண்டிப்பாக போடப்படும்.வால்பாறையிலும், மேட்டுப்பாளையத்திலும் மழை அதிகம்; பாதிப்பு அதிகமில்லை. எந்தவொரு இடத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, வால்பாறைக்கு செல்லும் ரோட்டை அரசு துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அமைச்சர் முத்துசாமி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை