எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளுக்கு மாநகராட்சி பள்ளிகளில் அட்மிஷன்
கோவை; கோவை மாநகராட்சி பள்ளிகளில், எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நேற்று முதல் துவங்கியுள்ளது.மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் தற்போது 81 ஆரம்பப்பள்ளிகள், 48 நடுநிலைப்பள்ளிகள், 10 உயர்நிலைப்பள்ளிகள், 16 மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 1 சிறப்புப் பள்ளி செயல்பட்டு வருகின்றன. இதில், 19 நடுநிலைப் பள்ளிகளில் ஏற்கனவே எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் நடைமுறையில் உள்ளன.30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர். அங்கன்வாடி மையங்களுடன் இயங்கும், 50 மாநகராட்சி ஆரம்பப் பள்ளிகளில் முன்பருவ மாணவர்களுக்கான, எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் துவங்கப்படும் என, மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த கல்வியாண்டில் புதிதாக 59 மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியுடன், எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. இதில், மாணவர் சேர்க்கை நேற்று முதல் துவங்கியுள்ளது. பெற்றோரிடையே நல்ல வரவேற்பு
தொடக்க நாளிலேயே, பி.என்.புதூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் 5, கோவில்மேடு பள்ளியில் 6, நல்லாம்பாளையம் பள்ளியில் 5 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். புதிய வகுப்புகள் துவங்கிய அனைத்து பள்ளிகளிலும், தலா ஒரு ஆசிரியர் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு உதவியாளர் பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர். 'வீடு வீடாக சென்று பெற்றோர்களிடம் சேர்க்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். தனியார் பள்ளிகளை போல் அனைத்துவிதமான வசதிகளும், தற்போது மாநகராட்சி பள்ளிகளிலும் உள்ளதால், பெற்றோர் தங்கள் குழந்தைகளை இங்கு சேர்க்க முன்வந்துள்ளனர். எல்.கே.ஜி.,க்கு 3 முதல் 4 வயது, யூ.கே.ஜி.,க்கு 4 முதல் 5 வயது வரை சேர்க்கை நடைபெறுகிறது' என பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.