கோடை உழவு செய்ய அறிவுரை
பெ.நா.பாளையம்; மண்ணை பொன்னாக்க கோடை உழவு செய்திட வேண்டும். விவசாய நிலங்களில் வெடிப்பு ஏற்படுவதை தடுக்க, கோடை மழை பெய்த பின்பு, தகுந்த ஈரப்பதத்தில் விளை நிலங்களை உழவு செய்து, சிறு தானியங்கள், பயிறு வகை பயிர்கள் விதைக்க வேண்டும். கோடை உழவு செய்வதால், மழை பெய்யும் போது, மண்ணுக்குள் நீர் உள்வாங்கி, நிலத்தடி நீரை சேமிக்கவும், மண் அரிப்பை தடுக்கவும் வழி ஏற்படுகிறது. மண்ணின் இறுக்கம் தணிந்து, நல்ல காற்றோட்டம் ஏற்படுகிறது. இதனால் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் நன்றாக பெருக்கமடைந்து, பயிர்களுக்கு சத்துக்கள் கிடைக்க வழி செய்கின்றன. மண்ணுக்கு உயிர் ஊட்டவும், மண்வளம் காக்கவும், கோடை உழவு செய்திட வேண்டும் என, வேளாண்துறையினர், விவசாயிகளுக்கு அறிவுரை கூறினர்.